வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா போயுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையோ, இங்கிலாந்து பிரதமரையோ, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களையோ இந்த முறை அவர் சந்திக்கவில்லை.
அன்னா ஹஸாரே போராட்டம், ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் கொந்தளிப்பு, தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மிஸ்டர் கிளீன் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நற்பெயர் சர்வதேச அளவில் காலியாகியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரண்மாகவே மன்மோகன் சிங்கை சந்திக்க எந்த வல்லரசுத் தலைவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சே போன்ற இரண்டாம் கட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தும் நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும் இதைப் பொருட்படுத்தவில்லை மன்மோகன் சிங். மாறாக, மிக முக்கியமான விஷயத்தை அவர் தனது பேச்சின்போது ஐ.நா. மன்றத்தில் வைக்கவுள்ளார். அது ஐ.நா. சபையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு மற்றும் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி என்பதுதான்.
இந்தக் கோரிக்கைக்கு ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா மட்டும் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தில் ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து விரிவாகப் பேசத் திட்டமிட்டுள்ளார் மன்மோகன் சிங்.
இதுகுறித்து டெல்லியிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா .சபையை சீரமைக்கும் முயற்சியின்போது, குறிப்பாகப் பாதுகாப்புச் சபையை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் ஐ.நா. அமைப்பானது நடுநிலையுடனும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர் நாடாக பொறுப்பேற்றதிலிருந்து, உலக அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாதுகாப்புச் சபையின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பணவீக்கம் போன்ற பிரச்சனைகளால் உலகப் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் உலகப் பாதுகாப்புக்கும், நாடுகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எழுந்துள்ள பிரச்னைகளால், எதிர்காலத்தில் ஸ்திரமற்ற சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனப் பிரச்னை இதுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. ஈரான், தெற்கு சூடான், இலங்கை, ஜப்பான், நேபாளம் ஆகிய நாடுகளுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
ராஜபக்சேவை சந்தித்துப் பேசும்போது இலங்கையின் முக்கியப் பிரச்சனையான தமிழர் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மாறாக, இலங்கையை ஐஸ் வைக்கும் வகையிலான பல விஷயங்கள் குறித்தே பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவைக் காரணம் காட்டி இந்தியாவிடமிருந்து முடிந்தவரை லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் ராஜபக்சே, இந்த சந்திப்பின்போதும் தனக்கு சாதகமான பல விஷயங்களை இந்தியாவிடமிருந்து உறுதிமொழியாக பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் ஐ.நா. பயணத்தின்போது இன்னொரு முக்கிய சந்திப்பும் நிகழவுள்ளது. அது நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராயுடனான சந்திப்பு. ஏற்கனவே பாகிஸ்தானுடன் பஞ்சாயத்து உள்ளது. வங்கதேசமும் முழுமையாக ஒத்துவருவதில்லை. சீனாவைக் காட்டி இலங்கை மிரட்டுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக நேபாளமும் இந்தியாவின் நட்பு வட்டத்திலிருந்து வேகமாக விலகிக் கொண்டிருக்கிறது. எப்படி பாகிஸ்தான், இலங்கை ஆகியவை சீனாவின் நட்பு நாடுகளாக விளங்குகின்றனவோ அதே நிலையை நோக்கி நேபாளமும் செல்ல ஆரம்பித்திருப்பதால் இந்தியாவுக்கு கவலை அதிகரித்துள்ளது.
எனவே நேபாளத்தை மீண்டும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த நாட்டு பிரதமருடன் பேச மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நேபாள நாட்டுத் தலைவரை நீண்ட காலமாகவே இந்தியத் தரப்பில் யாரும் சந்திக்காமல் உள்ளனர். மேலும் நேபாளம் குறித்து இந்தியா முன்பு போல அதிக அக்கறை காட்டுவதில்லை. அலட்சியப் போக்கில்தான் இருந்து வருகிறது. இதுவே இந்தியாவை விட்டு நேபாளம் விலகிச் செல்ல முக்கியக் காரணம். இதை இப்போதுதான் இந்தியா உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
மொத்தத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, வழக்கமாக வல்லரசு நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்கே நேரம் போதாமல் பிசியாக இருக்கும் மன்மோகன் சிங், இந்த முறை குட்டித் தலைவர்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போகிறார். அதேசமயம், ஐ.நா. மறுசீரமைப்பு என்ற முக்கிய வாதத்தையும் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து விட்டு வரப் போகிறார். இந்தியா மற்றும் பிரதமரின் எந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment