பாராளுமன்ற மக்களவையிலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி இ.அகமது பதில் அளிக்க எழுந்தார்.
அவர் பதில் அளிப்பதற்கு பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட கேபினட் மந்திரிதான் (எஸ்.எம்.கிருஷ்ணா) பதில் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர உறுப்பினர்களும் அதே கோரிக்கையை விடுத்தனர்.
அப்போது, பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி எழுந்து, கேபினட் மந்திரி டெல்லி மேல் சபையில் பதில் அளித்து கொண்டிருப்பதால், இங்கு அவர் பதில் அளிக்கவில்லை' என்று கூறினார்.
அதை அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கேபினட் மந்திரியின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்' என்று டி.ஆர்.பாலு கூறினார்.
அவருக்கு அ.தி.மு.க. குழு தலைவர் தம்பிதுரை ஆதரவு தெரிவித்தார். இது சர்வதேச பிரச்சினை. எனவே, ராஜாங்க மந்திரி பதில் அளிக்க முடியாது. கேபினட் மந்திரிதான் பதில் அளிக்க வேண்டும்' என்று தம்பிதுரை கூறினார்.
அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த இந்தர்சிங் நம்தாரி, விதிகளின்படி, கேபினட் மந்திரியோ, ராஜாங்க மந்திரியோ அல்லது பாராளுமன்ற விவகார மந்திரியோ பதில் அளிக்க தகுதியானவர்கள்' என்று கூறினார். ஆனால் தமிழக எம்.பிக்கள் அதை ஏற்கவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணாதான் பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர்.
அதற்கு நம்தாரி, கிருஷ்ணா மேல் சபையில் பதில் அளித்துக் கொண்டிருப்பதால், மக்களவையில் அவர் வெள்ளிக்கிழமை பதில் அளிப்பார்' என்று கூறினார். மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி அகமது, நான் பதில் அளிக்க தகுதியானவன்தான் என்ற போதிலும், உறுப்பினர்கள் விரும்பாவிட்டால், நான் பேசப் போவதில்லை' என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
No comments:
Post a Comment