தேர்தல் தோல்வி, ஸ்பெக்ட்ரம் விவகாரம், நில அபகரிப்பு வழக்குகள், உட்கட்சி பூசல் என, பல்வேறு விவகாரங்களில் சிக்கித் தவிக்கும் தி.மு.க.,வை, சட்டசபையிலும், கூட்டணியிலும் காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., கட்சிகள் தனிமைப்படுத்தியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழு கட்சி கூட்டணி, வெற்றி கூட்டணி என, வலம் வந்த தி.மு.க., ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிலைகுலைந்து விட்டது. கட்சியின் கொள்கை பரப்பு செயலர், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதானார்; சொந்த, "டிவி'யின் தலைமை நிர்வாகி சரத்குமார், சி.பி.ஐ., வலையில் சிக்கினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே, அவரது மகள் கனிமொழி எம்.பி., கைதாகி சிறை சென்றார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து, கட்டாய ராஜினாமா செய்து வைக்கப்பட்டார். இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கியுள்ள தி.மு.க., நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து, உட்கட்சி பூசல் வெடித்து, கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்தன. இதற்கிடையில், புதிய அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அடுக்கடுக்காக நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி வருகின்றனர்.
வழக்குகளால் துவண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கட்சி விதிப்படியும், கோவையில் தி.மு.க., பொதுக்குழு கூடியது. இதில், அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமலே, அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்து வேறுபாடுகளுடன், கூட்டம் முடிந்தது. இத்தனை சிக்கலிலும், காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய தி.மு.க., கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வை கண்டு கொள்ளவில்லை. "இனி தி.மு.க.,வுடன் கூட்டணியில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்து விட்டார். வி.சி.,யோ, வாயையே திறக்கவில்லை. சமச்சீர் கல்வி விவகாரத்தில், சட்டசபையிலிருந்து தி.மு.க., வெளிநடப்பு செய்தபோதும், வெளியே போராட்டம் நடத்தியபோதும், காங்.,கும், பா.ம.க.,வும் தி.மு.க.,வை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி கொண்டன.
தலைமை செயலக புதிய கட்டட முறைகேடு புகார் குறித்து, விசாரணை கமிஷன் அமைத்தபோதும், தலைமை செயலக புதிய கட்டடத்தை, மருத்துவமனையாக்கும் அறிவிப்பு வெளியான போதும், தி.மு.க.,வுக்கு, காங்., - பா.ம.க., கட்சிகள் எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை. இதேபோல், சட்டசபையில் துரைமுருகனை பேச அனுமதிக்காதது, ஒரே இடத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம் ஒதுக்காததால், தி.மு.க.,வினர் செய்த வெளிநடப்பு போன்ற பிரச்னைகளிலும், காங்., - பா.ம.க., கட்சிகள், சட்டசபையில் தி.மு.க.,வை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும், சித்திரை முதல் நாளாக்கும் மசோதாவிலும், தி.மு.க.,வுக்கு காங்., ஆதரவு தெரிவிக்கவில்லை.
அ.தி.மு.க., அரசின் 100வது நாளில், "நல்ல திட்டங்கள் செய்யும் அரசு' என, பா.ம.க.,வும், காங்.,கும் புகழ்ந்துள்ளன. இப்படி, பல பிரச்னைகளில் கூட்டணி கட்சிகளால், தி.மு.க., தனித்து விடப்பட்டுள்ளது. இதனால், தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,"கூடா நட்பு கேடாய் முடியும்' என, எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது, காங்கிரஸ் விஷயத்தில் சரியாகவே நடந்து விட்டது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் இளங்கோவன், தி.மு.க.,வை விமர்சித்தபோது, அவராகத்தான் விமர்சிக்கிறார் என, நினைத்தோம். ஆனால், அவர் மேலிட உத்தரவுப்படிதான் பேசியிருக்கிறார் என, இப்போதுதான் தெரிகிறது. பா.ம.க., - வி.சி.,யை பொறுத்தவரை, எப்போதுமே அணி மாறிகள்; அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை' என்றார்.
சிறையில்... சிறையில் : சேலத்தில் கொடிகட்டி பறந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறையில், திருச்செந்தூரில் தி.மு.க.,வுக்கு கொடி பிடித்த அனிதா ராதாகிருஷ்ணன் சிறையில் உள்ளார். மதுரையின் அஞ்சா நெஞ்சனாக பேசப்பட்ட அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட தளபதி, பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி ஆகியோர் சிறையில் உள்ளார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., பிரமுகராக திகழ்ந்த ரங்கநாதன் சிறையில், கருணாநிதியின் வசனங்களை சினிமா தயாரித்த லாட்டரி அதிபர் மார்ட்டின் சிறையில், "சன் டிவி' நிர்வாகி சக்சேனா சிறையில் உள்ளார். தென்சென்னை மாவட்ட தி.மு.க., செயலர் அன்பழகன் சிறையில் உள்ளார். தஞ்சை மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா சிறையில் உள்ளனர். திருச்சியில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, அன்பில் பெரியசாமி என, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான பலர் சிறைகளில் தள்ளப்பட்டனர். இதில், தளபதி, அன்பழகன், ராஜா உள்ளிட்ட சிலர் மட்டும் ஜாமினில் வந்துள்ளனர்.
No comments:
Post a Comment