இலவச லேப்டாப்புகள் எந்த வகுப்பு மாணவர்களுக்கு எந்த ஆண்டில் கிடைக்கும் என்பது குறித்து உத்தரவினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிகல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்புகள் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் என கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 9.12 லட்சம் லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப்புகள் அளிக்கப்பட உள்ளன. அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந் தேதி லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு:
லேப்டாப்புகளை கொள்முதல் செய்ய, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்புகள் அனைத்தும் பள்ளி மற்றும் கல்லூரித் துறைகள் மூலமாக விநியோகம் செய்யப்படும்.
நடப்பு நிதியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இரண்டாவது, நான்காவது ஆண்டு மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
இரண்டாவது நிதியாண்டில் (20122013) பிளஸ் 2 மாணவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும்,
பொறியியல் கல்லூரிகளில் இரண்டாவது, நான்காவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக்கில் கல்லூரிகளில் முதல் மற்றும் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் அளிக்கப்படும்.
மூன்றாவது நிதியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாவது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுக்கப்படும்.
அரிசி பெறத் தகுதியான ரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்பட உள்ளன. நடப்பு நிதியாண்டில் 25 லட்சம் குடும்பங்களுக்கு அவை கொடுக்கப்படுகின்றன. அரசு எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி நகரப் பகுதிகளில் 0.78 கோடி பேருக்கும், ஊரகப் பகுதிகளில் 1.07 கோடி பேருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் ரூ.85 கோடி பேருக்கு அவை அளிக்கப்பட உள்ளன. சென்னையில் 19 லட்சத்து 30 ஆயிரத்து 410 பேர் பயனாளிகளாகவும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 984 பேர் பயனாளிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment