கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டு பாரதீய ஜனதாவும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது எடியூரப்பாவும், குமார சாமியும் நல்ல நட்புடன் இருந்தனர். ஆனால் சுழற்சி முறையில் பதவியை விட்டுக் கொடுப்பதில் சர்ச்சை எழுந்ததால் அவர்களது கூட்டணி உடைந்தது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார். அதன் பிறகு எடியூரப்பாவும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் குமாரசாமியும் பாம்பும், கீரியும் போல மாறி விட்டனர். ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார் குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் திரட்டி வெளியிட்டனர். கர்நாடக மாநிலத்தில் பணம் கொழிக்கும் சுரங்கத்தொழில்களுக்கு உரிமம் அளித்ததில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக பரஸ்பரம் இருவரும் புகார் கூறினார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்களே அவர்களை வழக்கில் சிக்க வைத்தது. கர்நாடகாவில் உள்ள கோர்ட்டுகளிலும் லோக் ஆயுக்தா கோர்ட்டிலும் எடியூரப்பா, குமாரசாமி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை இழக்க நேரிட்டது. தற்போது அவருக்கு கோர்ட்டு முன்ஜாமீன் கூட கொடுக்கவில்லை. குமாரசாமியும் இதே மாதிரி முன் ஜாமீன் கிடைக்காமல் தவிப்புக் குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இருவருமே கைது செய்யப்படலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் அவர்கள் இருவரும் பகையை மறந்து ஒருவரை ஒருவர் காப்பாற்ற ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பாதான் ஓசையின்றி இந்த சமரச நடவடிக்கையை முதலில் தொடங்கினார். முதலில் தயங்கிய குமாரசாமி பிறகு உடன்பாட்டுக்கு வந்து விட்டார். அவர்களது ரகசிய உடன்பாடு படி ஒருவர் மீது ஒருவர் சுமத்தி யுள்ள குற்றச்சாட் டுக்களை கோர்ட்டில் பலவீனப்படுத்தும்படி நடந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நடக்கும்போது வாதங்களை சொதப்பலாக்கி, ஒருவருக்கு ஒருவர் உதவ தீர்மானித்துள்ளனர். இந்த திட்டத்தின்படி ஊழல் வழக்குகளில் இருந்து எடியூரப்பா, குமாரசாமி இருவருமே தப்பித்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய உடன்பாடு வெற்றி பெற்றால், கர்நாடகாவில் அடுத்த தேர்தலை பா.ஜ.க.- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment