எப்போது தென்படும் ரஜினியின் திருமுகம் என்று ஆவலோடு காத்திருக்கிறது தமிழ் திரையுலகம். கடந்த ஆட்சியில் அவ்வப்போது ரஜினியையும், கமலையும் அழைத்து ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது சந்தர்ப்பமும், விதியும்! இவர்கள் இருவரையுமே துவார பாலகர்கள் என்று விமர்சித்தவர்களும் இருந்தார்கள். ஆட்சியின் இறுதி காலத்திலேயே இதற்கெல்லாம் விடுமுறை அளித்துவிட்டு சிங்கப்பூர் பறக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கியது ரஜினியின் உடல்நிலை.
திரும்பி வரும்போது லாங் ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு புகைப்படங்களும் அதில் அரைகுறையாக தென்பட்ட அவரது முகத்தையும் தவிர வேறெந்த புகைப்படங்களும் இன்றுவரை வெளிவரவில்லை.
இந்த நிலையில்தான் அவர் எப்போது வெளியே வருவார் என்ற ஆவல் ஜல்லிக்கட்டு காளை போல திமிறிக் கொண்டு நிற்கிறது ரசிகர்கள் மனதில். ரசிகர்களுக்கு முகம் காட்டுகிறாரோ இல்லையோ? நெருங்கிய நண்பர் வீட்டு விசேஷத்துக்கு அவர் வரப்போகிறார் என்ற தகவல் மட்டும் கசிகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் 2ந் தேதி லீ மெரிடியன் ஓட்டலில் கே.எஸ்.ரவிகுமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம். இதில் ரஜினி கலந்து கொள்வார் என்று அத்தனை பேரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment