நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவதலமான புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழா இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய மாதாவின் அருளை பெறவும், தங்களின் பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்துள்ளனர்.
இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள அனைத்து விடுதிகள் நிரம்பிவிட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையோரம், பேராலய வளாகம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். விழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களிலும் நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திண்டிவனம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்தும், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேன்களிலும், டூரிஸ்ட் பஸ்களிலும் வந்து இறங்கிய வண்ணம் உள்ளனர்.
இதுதவிர தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பக்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏராளமான பக்தர்கள் காவி உடைகளை அணிந்து கூட்டம், கூட்டமாக மாதாவின் உருவம் பொறித்த கொடியை கையில் ஏந்தி கொண்டும், மாதாவின் பெருமைகளை விளக்கும் ஆன்மிக பாடல்களை இசைத்தவாறும் கடும் வெயிலையும் பொருட்படுத்ததாது வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
பேராலய திருவிழா கொடியேற்றத்தை காண பல்லாயிரகணக்கில் பக்தர்கள் குழுமியிருப்பதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
No comments:
Post a Comment