ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை காப்பாற்ற தமிழகம் முழுவதும் மாணவர்கள். தமிழ் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு போராடினர். தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட சபையிலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தண்டனையை குறைக்கக் கோரி ஐகோர்ட்டில் அப்பீல் செய்த மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 3 பேரின் தூக்கு தண்டனைக்கு 8 வார காலம் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். ஒட்டு மொத்த தமிழர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 29-ந்தேதி பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தரப்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எனக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டால் அது எனக்கு இரட்டை தண்டனை யாகிவிடும் என்று மனுவில் கூறியிருந்த பேரறிவாளன் 20-க்கும் மேற்பட்ட கேள்விகளையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கை மறு ஆய்வு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை மறு ஆய்வு கமிட்டி என்பதே அமைக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் வாரப்பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி. எக்ஸ் வெடி குண்டை தயாரித்தவர் யார் என்பது தெரியவில்லை.
இக்கொலை வழக்கில் 3-வது குற்றவாளி ஒருவர் உள்ளார். அவர் யார் என்றே அடையாளம் காணப்படவில்லை என்பது போன்ற கருத்துக்களை கூறியுள்ளதாக தெரிகிறது. இதனையும் பேரறிவாளன் தனது மனுவில் மேற்கோள் காட்டியிருந்தார். இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் நேற்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் நகல்கள் மத்திய அரசுக்கு உரிய முறையில் அனுப்பப்படும். அதில் பேரறிவாளன் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய அரசு மனு ஒன்றை தயார் செய்யும். இந்த பதில்கள் அடங்கிய மனு 8 வாரங்களுக்கு பின்னர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது மறு ஆய்வு கமிட்டி அமைப்பது குறித்தும் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment