இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் இன்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
புதுவை சட்டசபை கூட்டத்தில் சித்தர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமி புதுவை என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறி இருந்தார். அதன்படி நிதி ஒதுக்கி புதுவை பராமரிப்பதற்கு அரசு முயற்சிப்பதை இந்த முன்னணி வரவேற்கிறது.
வரதராஜபெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், திருக்காமீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில் ஆகியவற்றை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதே போல் காந்தி வீதியில் உள்ள பெருமாள் கோவில், அண்ணா சாலையில் உள்ள அம்மன் கோவில் உள்ளிட்ட சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து பராமரிக்க அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர்கள் என்ற போர்வையில் நக்சலைட்டுகள் புதுவையில் கால்பதித்து வருகின்றனர். இவ்வாறு ஊடுருவியுள்ள நக்சலைட்டுகள் தொழிலாளர் இயக்கங்களுடன் நுழைந்து பொதுமக்களிடம் பகிரங்கமாக பணம் வசூலித்து வருகின்றனர். இது புதுவையின் எதிர் காலத்துக்கு ஆபத்து. எனவே அரசு இதனை ஒடுக்க ஆரம்ப நிலையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை கவர்னர் ரம்ஜானையொட்டி முஸ்லிம்களை அழைத்து விருந்து கொடுத்தார். இது மதசார்பின்மைக்கு எதிரானது. இதுபோல் சிறுபான்மையினரை தாஜா செய்வது நடுநிலை பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவது கவர்னர் தரப்பு நியாயமெனில் மலையாளிகள், தெலுங்கர்கள், புத்த மதத்தினர் போன்ற சிறுபான்மையினருக்கு இதுபோல் மரியாதை அளிக்கப்படாதது ஏன்? இந்துக்களுக்கு அவர் தீபாவளி விருந்து அளிப்பாரா?
ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்.
புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அறவழி கல்வி கொண்டு வர வேண்டும். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பாடத்தில் சேர்க்க வேண்டும். மின்சார தடையால் ஏற்படும் இடைஞ்சலை தவிர்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது. விநாயகர் சதுர்த்தி பரிசாக தமிழகம், புதுவை கோவில்களில் தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய குடியிருப்புகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய போலீசார் தடை விதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்து முன்னணியின் புதுவை மாநில தலைவர் சணில்குமார், பொது செயலாளர் முருகையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment