தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவி காலம் கடந்த ஜுன் மாதம் 20-ந் தேதி முடிவடைந்தது. எனினும், புதிய கவர்னர் பொறுப்பேற்கும் வரை கவர்னராக நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். 78 வயதாகும் ரோசய்யா சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) மாலை பதவி ஏற்கிறார். சுதந்திர இந்தியாவின் 24-வது தமிழக கவர்னராக பொறுப்பேற்கிறார்.
இந்த பதவி ஏற்பு விழாவில், முதலில் தமிழக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, கவர்னர் நியமனம் குறித்த ஜனாதிபதியின் உத்தரவை படிப்பார். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், புதிய கவர்னர் ரோசய்யாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் புதிய கவர்னர் ரோசய்யாவுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.
தமிழ்நாட்டின் புதிய கவர்னர் ரோசய்யா, 1933-ம் ஆண்டு ஜுலை 4-ந் தேதி, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் வெமுருவில் பிறந்தார். குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் பி.காம் படித்தார். சுதந்திர போராட்ட வீரர் ஆச்சார்யா என்.ஜி.ரங்காவின் சீடரான இவர், ரங்காவின் சுதந்திரா கட்சி மூலமாக அரசியலில் நுழைந்தார்.
பின்னர், காங்கிரஸில் சேர்ந்த ரோசய்யா, 1995-ம் ஆண்டில் இருந்து 1997-ம் ஆண்டு வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். எம்.பி.யாகவும், எம்.எல்.சி.யாகவும் பதவி வகுத்துள்ளார். ஆந்திர காங்கிரஸ் மந்திரிசபைகளில் உள்துறை உள்பட பல்வேறு இலாகாக்களை வகித்தார்.
சென்னாரெட்டி, விஜயபாஸ்கர ரெட்டி, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் மந்திரிசபைகளில் நிதி மந்திரியாக இருந்தார். ஆந்திர சட்டசபையில் 16 தடவை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இவற்றில் 7 தடவை தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது, அகில இந்திய அளவில் சாதனை ஆகும்.
கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததால், ரோசய்யா ஆந்திராவின் 15-வது முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி வரை அப்பதவியில் நீடித்தார். பிறகு உடல்நிலையை காரணம் காட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆந்திர மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார்.
ரோசய்யா, பேச்சாற்றல் மிக்கவர். அவருக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. அவரது மனைவி பெயர் சிவலட்சுமி, இவர்களுக்கு சுப்பாராவ், மூர்த்தி என்ற மகன்களும், ரமாதேவி என்ற மகளும் உள்ளனர்.
மரபுப்படி புதிய கவர்னர் பதவி ஏற்க கவர்னர் மாளிகைக்கு வரும் நேரத்தில், பழைய கவர்னர் அங்கு இருப்பதில்லை. அதற்கு முன்பே புறப்பட்டு சென்றுவிடுவார்கள். அந்த வகையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று மாலை அல்லது நாளை காலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment