ஒரு கொள்கையில் நின்றால், அதில் முள்ளு குத்தினாலும் சரி, கல்லு தடுக்கினாலும் சரி. ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற குணம் படைத்தவர் குஷ்பு. திருமாவளவனோடு சரிக்கு சரி சண்டைக்கு நின்றதை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். (அதே திருமா வீட்டின் துக்க காரியம் ஒன்றில் முதல் ஆளாக நின்றவர் குஷ்பு என்பதையும் மறந்துவிடலாகாது)
அவர் திமுக வில் சேர்ந்தது திடீர் திருப்பம் என்றால், தேர்தலில் சுற்றி சுற்றி பணியாற்றியது அதைவிட பெரிய சுவாரஸ்யம். ஏனென்றால் கடந்த தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து குஷ்புவுக்கா, வடிவேலுக்கா என்பதில் பெரும் போட்டியே நடந்தது. ஆனால் குஷ்புவின் சிவப்பை, வடிவேலுவின் கருப்பு வென்றது தனிக்கதை. (அப்புறம் ஏன் கருப்பு, சிவப்பு தோற்றுச்சாம் என்றெல்லாம் கேள்வி கேட்டு வெறுப்பேற்றக் கூடாது, ஆமாம்...)
சரி விஷயத்துக்கு வருவோம். சென்னை மாநகராட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதில் திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகும் வடிவேலு மாதிரி அமைதியாக இருக்காமல், முன்பு போலவே ஆக்டிவாக செயல்படும் குஷ்புவை நிறுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை.
கடந்த தேர்தலிலேயே எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்க வேண்டியது. தவறிவிட்டது. இந்த முறை மேயருக்கு நிற்க வைக்கலாம் என்று பேசி வருகிறார்களாம். ஆனால் கட்சியை தாண்டி நடுத்தரமானவர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் தற்போதைய மேயரையும் விட்டுவிட தயாரில்லை தலைமை. என்ன நடக்கப் போகிறதோ?
No comments:
Post a Comment