சென்னை சைதாப்பேட்டையில் சிறிது நேரம் நடந்த சாலை மறியலால் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள கோர்ட் வளாகம் அமைந்துள்ள சாலை தற்போது ஒரு வழிப் பாதையாகி விட்டது. பல மாதங்களுக்கு முன்பே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கு நடை மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
அந்த நடை மேம்பாலத்தைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினர் உத்தரவிட்டனர். மேலும் அந்த சாலையில் இருந்த சிக்னலையும் மூடி விட்டனர்.
ஆனால், நடை மேம்பாலம் மிகவும் உயரமாக இருப்பதால் வயதானவர்களும், குழந்தைகளும், பெண்களும் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து சாலையைக் கடந்து போக ஆரம்பித்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இந்த சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும், சிக்னலை மீ்ண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக மக்கள் கோரி வந்தனர். ஆனால் போலீஸ் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை எட்டரை மணியளவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் அதிரடியாக சாலை மறியலில் குதித்தனர். இதனால் விமான நிலையம், கிண்டி பகுதிகளிலும், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை வரையிலும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனுமார் வால் போல நீண்டு முடங்கிக் கிடந்தன. எநத்ப் பக்கமும் போக முடியாத அளவுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் போக்குவரத்து முடங்கிப் போன. கிட்டத்தட்ட சென்னையே முடங்கிப் போனது போல இருந்தது இந்த போக்குவரத்து பாதிப்பு.
போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக மக்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதனால் போக்குவரத்து மேலும் பாதிப்பைச் சந்தித்தது. இதையடுத்து ஒரு வழியாக பத்து மணியளவில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் போராட்டத்தின் எதிரொலியாக முடங்கிப் போயிருந்த போக்குவரத்து சீராக பிற்பகல் 1 மணி ஆனது. இந்த போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
No comments:
Post a Comment