ஓட்டுப் போட எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமர் சிங் மற்றும் முன்னாள் பாஜக எம்.பி.க்கள் பகோரா, குலஸ்தே மற்றும் எம்.பி. அஷோக் அர்கால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால், மத்திய அரசு மீது கடந்த 2008ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
அப்போது அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறு பாஜக எம்பிக்கள் சிலருக்கு ரூ.1 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டது. இதை அந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்திலேயே கொண்டு வந்து காட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்தப் புகார் குறித்து டெல்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், வழக்குப் பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த வழக்கில் யாரையும் கைது செய்யாதது ஏன் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்நிலையில் அதே வழக்கில் அமர் சிங், முன்னாள் பாஜக எம்.பி.க்கள் பகோரா, குலஸ்தே மற்றும் எம்.பி. அஷோக் அர்கால் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
உடல் நலக்குறைவு உள்ளது என்று அமர்சிங் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யபப்ட்டவர்களை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment