கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அணு உலையை மூடக் கோரியும் நடந்து வரும் போராட்டம் கவலை தருகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த அணு உலையை மூடினால், இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
கூடங்குளத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அணு மின் நிலையத்தை நிர்மானித்துள்ளது இந்தியா. இங்கு கட்டப்பட்டுள்ள அணு உலைகள் ரஷ்யாவால் கட்டித் தரப்பட்டவையாகும். திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து முடிவுற்று, உற்பத்தி வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அணு மின் நிலையத்தை எதிர்த்துப் பெரும் போராட்டம் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய தூதரகத்தின் மூத்த அதிகாரியான செர்ஜி கர்மலிடோ கூறுகையில்,
தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை. இருப்பினும் இந்திய அரசும், இந்திய அணு சக்தித் துறையும் இதற்கு விரைவில் தீர்வு காண்பார்கள் என நம்புகிறோம். அணு உலையால் ஆபத்து என்று மக்கள் பயப்படுவதாக தெரிகிறது. அந்த அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கும், இந்திய அணு சக்தித் துறைக்கும் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய வேண்டும்.
இந்த அணு மின் நிலையத் திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தென் இந்தியாவுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கியமானது, அவசியமானது.
புகுஷிமோ அணு உலையைக் காட்டி கூடங்குளம் குறித்து அச்சம் தெரிவிக்கப்படுகிறது. புகுஷிமோவில் உள்ளவை மிகவும் பழமையானவை, நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்டவை. ஆனால் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ளவை மிகவும் அதி நவீனமானவை, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவை. புகுஷிமோ சம்பவத்திற்குப் பின்னர் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இந்தியா கோரியுள்ளது. அதையும் கூட நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனவே இந்த அணு உலைகளால் எந்தவகையான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
எனவே புகுஷிமா அணு உலையுடன், கூடங்குளம் அணு உலையை ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. இரண்டுவே வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டவை.
கூடங்குளம் திட்டம் மூடப்பட்டால், அங்கு கட்டப்பட்டுள்ள அணு உலைகளை மூட நேரிட்டால் இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நிலை வராது என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவுடனான நல்லுறவிலும் பாதிப்பு ஏற்படாது என்று கருதுகிறோம் என்றார் அவர்.
கூடங்குளம் திட்டம் குறித்து இப்போதுதான் ரஷ்யா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுத்த இந்தியா முடிவு செய்தால், இந்தியாவில் ரஷ்யா மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் பாதிக்கப்படும் என அது கூறியுள்ளது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment