ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தவுள்ள பாஜக தலைவர் அத்வானி இன்று, அதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவைக் கோரி அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பையடுத்து, நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அத்வானி அறிவித்தார்.
சமீபத்தில் ரத யாத்திரை நடத்தப் போவதாக அத்வானி அறிவித்தார். ஆனால், தங்களிடம் ஆலோசனை நடத்தாமலேயே, தன்னை வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்திக் கொள்ளும் திட்டத்துடன் இந்த யாத்திரையை அத்வானி அறிவித்ததால் ஆர்எஸ்எஸ் கடுப்பானது.
இதனால், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று அத்வானி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அவருக்கு அறிவுறுத்தியது. இதைச் செய்தால் மட்டுமே யாத்திரைக்கு ஆதரவு தருவோம் என்றும் ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
வரும் அக்டோபர் 11ம் தேதி தனது யாத்திரையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள அத்வானி, ஆர்எஸ்எஸ்சின் இந்த கெடுபிடியால் அதிர்ந்து போனார்.
வரும் தேர்தலில் ராகுல் காந்தியை காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தலாம் எனக் கருதும் ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் இளையவர் ஒருவரை, குறிப்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, முன் நிறுத்தலாம் என்று கூறி வருகிறது.
இந் நிலையில் அந்தப் பதவிக்கு அத்வானி மீண்டும் குறி வைப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. இதை அவரிடம் நேரில் சொல்லிவிட முடிவு செய்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அவரை நாக்பூருக்கு வருமாறு உத்தரவிட்டது.
இந் நிலையில் தான் இன்று ஆர்எஸ்எஸ் தலைவரை நேரில் போய் சந்திதார் அத்வானி. அப்போது பிரதமர் பதவிக்கு நான் போட்டியிவில்லை என்று ஆர்எஸ்எஸ்சிடம் அத்வானி விளக்கினார்.
பகவத்துடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அத்வானி, பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஆர்எஸ்எஸ், ஜனசங்கம், பாஜக என கட்சியில் ஒரு பகுதியாக இடம் பெற்றிருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஒரு பிரதமருக்குக் கிடைப்பதை விட அதிகமானதை எனக்கு எனது கட்சியும் தொண்டர்களும் தந்துவிட்டனர். நான் இங்கு வந்தது எனது யாத்திரைக்கு ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆசிர்வாதம் பெறுவதற்காகத் தான்.
எனக்கு தனது முழு ஆதரவையும் யாத்திரைக்கு முழு ஆசிர்வாதமும் தந்தார் பகவத். வரும் 24ம் தேதி பாஜக தலைவர் கட்காரி டெல்லி வருவார். எனது யாத்திரை குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.
இதற்கு முன்பு, அத்வானி 5 ரத யாத்திரைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி, குஜராத்தில் இருந்து அத்வானி தொடங்குவார் என்றும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான அக்டோபர் 11ம் தேதி தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அத்வானியின் ரத யாத்திரை பிகாரில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த 1990-ம் ஆண்டு அத்வானியின் ராம் ரத யாத்திரை, பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவால் தடுத்து நிறுத்தப்பட்டது. பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் உத்தரவின்பேரில் அத்வானியை கைது செய்தார் லாலு.
அதன் நினைவாக அத்வானி இந்த முறை பிகாரில் இருந்தே தனது ரத யாத்திரையை தொடங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ள பிகாரின் முதல்வர் நிதிஷ்குமார் இந்த ரத யாத்திரை தனது மாநிலத்தில் தொடங்குவதை விரும்பவில்லை.
ஆனாலும் அவரது எதிர்ப்புக்குப் பணியாமல் இங்கிருந்துதான் யாத்திரையை தொடங்க வேண்டும் என்று அத்வானியிடம் பாஜக தலைவர்கள கூறியுள்ளனர்.
இதற்கு அத்வானியும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அத்வானியின் ரத யாத்திரை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த தினமாக அக்டோபர் 11ம் தேதி, அவரது பிறந்த இடமான பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாரா என்னும் இடத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்த ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அத்வானியின் ரத யாத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment