உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி மாயாவதி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ``உத்தரபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையில், முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப, மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்த விஷயத்தில் மாநில அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கத் தயாராக உள்ளது'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ``இதற்காக அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டுவர வேண்டும்'' என்றும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். நேற்று அவர் இதேபோல் மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதி உள்ளார்.
இந்த முறை அவர் வேண்டுகோள் விடுத்து இருப்பது உத்தரபிரதேச மாநில உயர்சாதி ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த இதர சாதியினருக்கும். உயர்சாதி ஏழைகளும், சமூகத்தில், பொருளாதாரத்தில், கல்வியில் நலிவடைந்த இதர சாதி ஏழைகளும் வாழ்க்கையில் முன்னேற மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் கொண்டுவர வேண்டுமானால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மத்திய அரசு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேற்கண்ட தகவல்கள் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் 2007-ம் ஆண்டு உங்களை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தேன். மாநில அரசின் ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்கும், சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ரூ.80 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கும்படி அப்போது வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், பலமுறை மீண்டும், மீண்டும் இந்த கோரிக்கையை விடுத்தும் இன்றுவரை அந்த நிதி அளிக்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியை அளித்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக எட்ட முடியும் என்று உறுதி அளிக்கிறேன்'' என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார். மாயாவதியின் இந்த கடிதங்கள் குறித்து, அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி, பா.ஜனதா தலைவர் சூரிய பிரதாப் சகி, சமாஜ்வாடி கட்சியின் சட்டசபை தலைவர் அகமது ஹாசன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து உள்ளனர். ``2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது.
இந்த தேர்தலில் முஸ்லிம்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளின் ஓட்டுகளைப் பெறுவதற்காக அவர்களின் மேல் மாயாவதிக்கு திடீர் அக்கறை ஏற்பட்டு உள்ளது'' என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment