ராஜீவ்காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதன்பின் அவர்கள் அனுப்பிய கருணை மனுக்களை, ஜனாதிபதி நிராகரித்தார். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த நீதிபதிகள், 8 வாரத்துக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையிலும், 3 பேரின் தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால், நான் இதுபற்றி எதுவும் கூற முடியாது. கோர்ட்டில் தற்போது இருக்கும் வழக்கில், உள்துறைக்கு கடிதம் வந்தால், அதற்குரிய பதில் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும். ஜனாதிபதியால் கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட பின்பும், பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டை அணுகிய சம்பவங்கள் ஏற்கனவே இருக்கின்றன.
எனவே தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மரண தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டை அணுகி இருப்பது புதியது அல்ல. மரண தண்டனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள். இது நீண்ட விவாதத்துக்கு உட்பட்டது. உடனே இதுபற்றி பதில் தெரிவிக்க இயலாது.
மரண தண்டனை அமலில் இருக்கும் வரை, நீதிபதிகள் இந்த தண்டனையை சரியான நபர்களுக்கு வழங்கத்தான் செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது ஜனாதிபதியிடம் 14 கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் ஒரு மனு மீது கூட முடிவு அறிவிக்கப்பட வில்லை.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் பற்றி, தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பாகிஸ்தான்- அமெரிக்க பிரஜையான லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் பங்கு பற்றி மேலும் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உறுதியான-இறுதியான தகவல்கள் முழுமையாக கிடைத்ததும், அவர் மீதான குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment