வினையை இன்றைக்கு விதைப்பவர்கள் ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. காவல்துறையினருக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. மக்களை மேலும் ஏழைகளாக்கும் நடவடிக்கைதான் இலவசத் திட்டங்கள் என்றார்.
ஆனால், திமுக ஆட்சியில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என்பதை விரிவாக்கி, மாதம் அந்த 20 ரூபாயையும் தர வேண்டியதில்லை, அதையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்று கூறி, அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு. பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.6000 வழங்கும் திட்டமும் அப்படித்தான். உதவித் தொகையை அதிகப்படுத்தி அதிமுக அரசு தொடர்கிறது.
ஏழையெளியவர்களுக்கு இலவசமாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம் ஆகியவற்றை அதிமுக அரசு தொடரவில்லை. திமுக ஆட்சியின் வழியில் இலவசத் திட்டங்களை வழங்க முன்வந்த ஜெயலலிதா அரசு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப், ஆடு மாடுகள் என்று தாங்களும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்கள்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான திட்டம், வேறு பெயரில் தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். திமுக அரசின் மற்றொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம். அந்தத் திட்டமும் இந்த ஆட்சியில் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகிறது. அதிமுக அரசு மூடுவிழா நடத்த முதலிலே முயற்சி எடுத்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம். திருத்தம் செய்கிறோம் என்ற பெயரால் புத்தகங்களில் அதிமுக ஆட்சியினர் செய்த மாறுதல்கள் திமுக மீதான காழ்ப்பினை உணர்த்துவதாகவே இருந்தன.
திமுக ஆட்சியில் எழுப்பப்பட்டது தலைமைச் செயலகக் கட்டிடம், புதிய சட்டப் பேரவை வளாகம். தலைமை செயலகம் குறித்து விசாரணைக் கமிஷனை அறிவித்து விட்டு, அவரே அந்தக் கட்டிடத்தில் உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையை நிறுவப்போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு மட்டும் விசாரணைக் கமிஷன் பரிந்துரைக் காக ஏன் காத்திருக்கவில்லை?.
பாதிக்கப்பட்ட மற்றொன்று செம்மொழி மைய அலுவலகம், பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம். இதன் கதி அதிமுக ஆட்சியிலே என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலை. அதுபோலவே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், ஜெயலலிதா மோனோ ரயில் திட்டம் அறிவித்திருக்கிறார்.
வீடு வழங்கும் திட்டம், சட்டமன்ற மேலவை ஆகியவற்றுக்கு மூடு விழா நடத்திய பெருமை ஜெயலலிதாவையே சேரும். அதுபோலவே செம்மை நெல் சாகுபடி முறைக்கு ராஜராஜன் 1000 என்று என்னால் பெயரிடப்பட்டது. அந்தப் பெயரும் மாற்றப்பட்டுவிட்டது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை பழைய நிலைக்கே கொண்டு வரும் மசோதாவைக் கொண்டுவந்து பேரவையிலே நிறைவேற்றி யிருக்கிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும் நாசமாக்கும் முயற்சி. திருமழிசையில் துணை நகரம் ஒன்றினை அமைக்கப் போவதாக பேரவையில் ஜெயலலிதா வழக்கம் போல 110வது விதியின் கீழ் அறிவித்தார். அந்தத் திட்டம் பற்றி நான் விவரமாக எழுதியிருக்கிறேன். அதிகாரிகளை அழைத்து நான் எழுதியிருப்பதெல்லாம் உண்மைதானா என்று கேட்டறிந்த பிறகு எதுவும் பதில் கூறாமலேயே விட்டுவிட்டார்கள்.
தமிழக அரசின் சார்பாக 5 வகையான திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், என்னுடைய அன்னையார் பெயரிலே உள்ள அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண உதவித் திட்டம் என்பதை மட்டும் ஜெயலலிதா அவசர அவசரமாக மாற்றி, டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டத்துடன் இணைத்துவிட்டார்.
மேலும், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட பேரவையில் மசோதா ஒன்றினை தாக்கல் செய்து, குரல் வாக்கின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார். சேலத்தில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மூடு விழா நடத்தியிருக்கிறார்.
நான்கு மாத கால அதிமுக ஆட்சியில் இப்படித்தான் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியாளர்கள் சிந்திப்பதெல்லாம் திமுக முன்னோடிகளையெல்லாம் பொய் வழக்கிலே எப்படி சிக்க வைத்து கைது செய்து சிறையிலே அடைப்பது என்ற கொடூரமான எண்ணம்தான். ஒரு வழக்கிலே நீதி மன்றம் ஜாமீன் வழங்கினால், வேறு ஏதாவது ஒரு வழக்கினை அவர்கள் மீது தொடுத்து தொடர்ந்து சிறையிலே வைப்பதற்கான முயற்சியிலே காவல் துறையினரின் துணையோடு செயல்படுகிறார்கள்.
வினையை இன்றைக்கு விதைப்பவர்கள் ஒரு நாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பது மட்டும் உண்மை. காவல்துறையினருக்கும் சேர்த்துத்தான் இதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
No comments:
Post a Comment