அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. மதுரையை விட்டே காணாமல் போய்விட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை ஓபுளாபடித்துறை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 3 மாதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இந்தியா மட்டும் அல்ல உலக தலைவர்களே பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்தி வருகிறார்.
தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்த கூட்டம் நாட்டைவிட்டே விரட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக நகரமான மதுரையை தி.மு.க.வினர் அழகிரியின் தலைமையில் செய்திட்ட அட்டகாசங்கள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால் இன்று ஒழிந்துவிட்டது. அதனால் தான் மதுரை மக்களால் இன்று ஒரு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டணத்தில் ஆன்மீகம் நிறைந்த மதுரை மண்ணில் ஆடியவன் யாரும் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கடந்த 2007ம் ஆண்டு அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. மதுரையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.
இதை நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார். ஆடியவர்களுக்கு எல்லாம் அன்றைய தினம் முடிவு கட்டடும் என்று அப்போதே தெரிவித்தேன். அது இப்போது நடந்துவிட்டது.
தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு துறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ததில் மட்டும் 634 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கேஸ் அடுப்புகள் வாங்கியதில் 164 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு பதிலாக போலி நகைகளை வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தப்பிக்க முடியாது. ஒருநாள் உள்ளே செல்லும் காலம் விரைவில் வரும். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தேடிதந்ததை போல் உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment