மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று கூடங்குளம் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் தொடங்கப்பட்டு, முதல் மின் நிலையத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் சொன்னதையே எடுத்துச் சொன்னேன்...
இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகள் ஆகியோருடன் எனது அரசு ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததையும் எடுத்துக் கூறி, உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட வேண்டும் என்று நான் 16.9.2011 அன்றைய அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டேன்.
கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் அந்தப்பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்கவில்லை. எனவே, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே எனது அறிக்கையில் தெரிவித்தவாறு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த ஒரு திட்டச் செயல்பாட்டையும் எனது அரசு ஊக்குவிக்காது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அணு மின் திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அந்தப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், மத்திய அரசு இதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
சம்பந்தமில்லாதது போல நடந்து கொள்வதா...
கூடங்குளம் பகுதியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்சம் ஆகியவைக் குறித்து தனக்கு சம்பந்தமே இல்லாததைப் போன்று மத்திய அரசு நடந்து கொண்டு வருகிறது. அந்தப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான முழுப் பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது. ஆனால், அந்தப் பொறுப்பை மத்திய அரசு இதுவரை எடுத்துக் கொள்ளாததோடு, இந்தப் பிரச்சனை ஏதோ மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை போல் கை கழுவி விடுவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சமீபத்தில் சென்னை வந்த மத்திய அரசின் முக்கியத் துறையான சுற்றுச் சூழல் துறையின் அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனிடம் இந்தப் பிரச்சனைக் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, இந்தப் பிரச்சினை தன்னுடைய துறை சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறி கை கழுவிவிட்டார். மேலும், இதைப் பற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்றும் மேம்போக்காக கூறியுள்ளதன் மூலம், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்ற தொனியில், பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, முக்கியத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஒரு அமைச்சர், கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வை நீக்கும் வகையில் எதையும் தெரிவிக்காதது வருந்தத்தக்கதாகும்.
மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் நிறுவனமான இந்திய அணு மின் கழகத்தால் கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு தன்னுடைய பொறுப்பை முழுவதும் தட்டிக் கழிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தப்பகுதி மக்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சனைப் பற்றி சம்பந்தப்பட்ட மக்களுடன் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் செய்யாமல், தன்னுடைய கடமையில் இருந்து மத்திய அரசு தவறி உள்ளது மிகவும் துர திருஷ்டவசமானது. எனவே, இந்தப் பிரச்சனை குறித்து நான் பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன்.
பிரதமரைச் சந்திக்கக் குழு
அந்தக் கடிதத்தில், நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பாரதப் பிரதமரை சந்திக்கும் என்றும், அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் இந்தக் குழு அளிக்கும் என்றும் தெரிவித்து உள்ளேன்.
பணிகளைத் தொடர வேண்டாம்...
மேலும், இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
பிரதமருக்கு அளிக்க உள்ள கோரிக்கை மனுவில் நான் கையெழுத்து இடுவேன். அந்த மனுவில், ஒத்தக் கருத்துடைய கட்சித் தலைவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், கோரிக்கை மனுவுடன் பிரதமரை சந்திக்க இருக்கும் இந்தக் குழுவில், இந்தப் பிரச்சனையில் ஒத்த கருத்துடைய கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்...
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எனது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment