தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். அவரை மாவோயிஸ்டுகள் கடந்த 21-ந்தேதி கடத்திச் சென்று விட்டனர்.
அவரை விடுவிக்க வேண்டுமானால் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், ஜெயிலில் உள்ள 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 8 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முன்னதாக 3 நிபந்தனைகளை விதித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கிடைத்த தகவல்களின்படி மாவோயிஸ்டுகள் அறிக்கை விடுத்துள்ளதாவது;
* சிறையில் இருக்கும் 76 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்.
* உடல்நலம் குன்றியுள்ள கலெக்டரை காட்டில் வைத்திருக்க விருப்பமில்லை.
* கலெக்டரை மீட்பதில் மாநில அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை.
* மே-2 ற்குள் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால் மக்கள் மன்றத்தின் முன்பு கலெக்டர் நிறுத்தப்படுவார்.
*மக்கள் மன்றம் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், ஆயுதம் தாங்கிய 400 மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் பிணைக் கைதியாக இருக்கிறார். அவருடன் அம்மாவட்டத்திலுள்ள இளம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் மீட்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. இதனால் சத்தீஸ்கர் அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு சார்பில் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தூதுக் குழுவினர், இருதரப்பினரின் பிடிவாதத்தினால் கவலை அடைந்துள்ளதாகவும், இதனால் கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment