முடி சூட்டலுக்குப் பின்னர் மதுரை திரும்பிய நித்தியானந்தாவை மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கோவிலை சுட்டிக் காட்டினார் மதுரை ஆதீனம். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் நேற்று இரவு பெங்களூரிலிருந்து மதுரைக்கு வந்தனர். மதுரை ஆதீன மடத்திற்குள் உள்ள விடுதியில் தங்கினர். நடிகை ரஞ்சிதாவும் இவர்களுடன் பெங்களூரிலிருந்து வந்தார்.
இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை ஆதீனமும் நித்தியானந்தாவும் சந்தித்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த ஆதீனமாக 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். முறைப்படியான இளைய ஆதீனமாக பட்டம் சூட்டும் விழா ஜூன் 5ம் தேதி நடைபெறும். மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா ரூ. 1 கோடி நிதியுதவி செய்கிறார் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு இருவரும் அருகில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றனர். தற்போது மதுரையில் சித்திரைத் திருவி்ழா நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கோவிலுக்குள் சேர்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நித்தியானந்தாவுக்கு கோவிலைச் சுற்றிக் காட்டினார் மதுரை ஆதீனம். பின்னர் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment