புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார். வேறு கட்சி ஆதரவு கோரினால் அந்தக் கட்சியைப் பொறுத்து ஆதரவு தருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந் நிலையில் புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எ.ல்.ஏ. முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்ததால் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இங்கு அதிமுக ஆதரவோடு தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்ற இந்திய கம்யூனிஸ்ட் திட்டமிட்டிருந்தது. அதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க தேதி கேட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு நேரம் ஒதுக்காததோடு ஒரு மரியாதைக் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவிக்காமல் அதிமுக இந்தத் தொகுதியில் தனது வேட்பாளராக கார்த்திக் தொண்டமானை அறிவித்துள்ளது.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், புதுக்கோட்டை தொகுதியை தங்களுக்கு விட்டுத் தருமாறு அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தனது வேட்பாளரை அதிமுக அறிவித்துவிட்டது. இதனால் நாங்கள் அங்கு போட்டியிடுவது நேர விரயம் என்பதால் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
அங்கு போட்டியிடும் எந்தக் கட்சியாவது ஆதரவு கோரினால் அதைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவு தர முன் வந்த சிபிஎம்:
முன்னதாக இடைத்தேர்தலில் சிபிஐ போட்டியிட்டால் ஆதரிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிகவை ஆதரித்தோம். இதனால் அந்த கட்சியும் இந்தக் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது என்றார். ஆனால், தா.பாண்டியன் போட்டியில்லை என அறிவித்துவிட்டதால் சிபிஎம் ஆதரவு என்பது தேவையில்லாமல் போய்விட்டது.
இப்போது சிபிஎம், சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை ஆதரிக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், தேமுதிக புதுக்கோட்டையில் போட்டியிடுமா என்பது இதுவரை தெரியவில்லை.
திமுக-தேமுதிக ஆலோசனை:
இந்த இடைத் தேரிதலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக தனது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. திமுக இங்கு போட்டியிடும் என்றே தெரிகிறது. புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணனை கட்சித் தலைமை அழைத்துள்ளதையடுத்து அவர் சென்னை விரைந்துள்ளார்.
அதே போல தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜாகீரும் சென்னை தலைமை அலுவலக்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் நிலை பற்றி மேலிடம் முடிவு செய்யும்-ஞானதேசிகன்:
காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில்,
புதுக்கோட்டை இடைத் தேர்தல் இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரசின் நிலை பற்றி தமிழக பொறுப்பாளரும் அகில இந்திய பொதுச் செயலாளருமான குலாம்நபி ஆசாத்திடம் கலந்து பேசி அவரது கருத்தை பெற்ற பிறகு கட்சி மேலிடம் முடிவு செய்யும். திமுவுடனான உறவு தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment