தமிழ்நாட்டில் தற்போது பல மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை தினமும் 12 ஆயிரம் முதல் 12 ஆயிரத்து 800 மெகாவாட். ஆனால் அந்த அளவு மின் உற்பத்தி இல்லை. மத்திய அரசும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கவில்லை.
பொது மின்பாதை மூலம் வெளி மாநில மின்சாரம் வாங்கவும் வசதி இல்லை. எனவே, இப்போது தமிழ்நாட்டில் தினமும் 3 ஆயிரம் மெகாவாட் முதல் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு உள்ளது. கூடங்குளம் மின் உற்பத்தி தொடங்கினால் 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 696 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
என்றாலும், தொடர்ந்து காற்று வீசாததால் முழு உற்பத்தி அளவை எட்ட முடியவில்லை. காற்றாலைகள் மூலம் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் முதல் 2500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கடந்த சில தினங்களாக காற்றாலைகள் அமைந்துள்ள பகுதியில் காற்று வீச தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு தினமும் 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கிறது. இது தவிர தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. எனவே மின்சார தேவை ஓரளவு குறைந்துள்ளது. எனவே கூடுதலாக இருக்கும் மின்சாரத்தை கொண்டு கிராமங்களில் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரமும், நகரங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் 10 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. இரவு நேரங்களிலும் மின்சாரத்தை நிறுத்தும் நிலை இருக்கிறது. தற்போது காற்றாலை மின் உற்பத்தி தொடங்கி இருப்பதால் கிராமங்களில் மின்வெட்டு 5 மணி நேரமாக குறைந்துள்ளது. இரவு நேரமின்வெட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து காற்று வீசினால் கிராமங்களில் மின்வெட்டு மேலும் குறையும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment