சட்டப்பேரவையில் தேமுதிகவினர் எந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினாலும் அதற்கு அமைச்சர்களும், முதல்வரும் ஆதாரம் உள்ளதா? அத்தாட்சி உள்ளதா? என கேட்டு வருகிறார்கள். இப்போது 4 நாள்களில் 6 தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து 6 முறைகேடுகள் குறித்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன். இந்த ஆதாரங்களை, மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளேன். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ் என்றார் விஜயகாந்த்.
ஆத்தூர் அருகே கெங்கவல்லி தொகுதியில் கொண்டையம்பள்ளியில் ரேஷன் கடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பணம் வாங்கிக் கொண்டு 4 லிட்டர் மட்டுமே வழங்கிய கடைக்காரர்களை வறுத்து எடுத்தார்.
அப்போது 4 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அரசு உத்தரவி்ட்டுள்ளதாக கடைக்காரக்கள் கூற, அதற்கான அரசாணையை கொண்டு வரும்படி விஜயகாந்த் கேட்டார். இதையடுத்து ரேஷன் கடைக்காரர்கள் கடையைப் பூட்டி விட்டு ஓடினர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், இந்த ரேஷன் கடையில் 250 கார்டுதாரர்களில் 200 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.
அதேபோல், 5 லிட்டர் மண்ணெண்ணெய்க்காக பணம் கொடுத்தவர்களுக்கு 4 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு ரேஷன் கடையில் மட்டும் மாதத்துக்கு 250 லிட்டர் மண்ணெண்ணெய் திருடப்படுகிறது. அதேபோல், 50 கார்டுகளுக்கு வழங்கப்படும் பொருட்களும் திருடப்படுகின்றன என்றார்.
அதிமுகவினர் நில ஆக்கிரமிப்பு:
பின்னர் சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லிமலை உறைவிடப் பள்ளியில் விஜயகாந்த் ஆய்வு நடத்தினார். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அவர்,
மலைவாழ் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறிக்கொண்டே மலைவாழ் மக்களின் நிலங்களை ஆளும்கட்சியினர் ஆக்கிரமித்து வருகின்றனர். கொல்லிமலை உறைவிடப் பள்ளியின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் போதிய அளவு மைதானம் இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் நிலங்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த ஆதாரம் போதுமா அமைச்சர்களே?:
சட்டப்பேரவையில் தேமுதிகவினர் எந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினாலும் ஆளுங்கட்சியினர் அதற்கு ஆதாரம் கேட்கின்றனர். அமைச்சர்களும், முதல்வரும் ஆதாரம் உள்ளதா? அத்தாட்சி உள்ளதா? என கேட்டு பதில் கூற மறுத்து வருகிறார்கள். இப்போது 4 நாள்களில் 6 தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து 6 ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன்.
இடைத்தேர்தலில் பணம் கொடுத்துத்தான் அதிமுக வெற்றி பெறும்:
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணம் கொடுத்துத்தான் அதிமுக வெற்றி பெறும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் புதியவர்களாக இருப்பதால் அவர்களிடமும் குறைகள் இருக்கவே செய்யும். அதை அவர்களே சரி செய்து கொள்வார்கள்.
தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகளில் எம்எல்ஏக்களின் பணிகளை ஆய்வு செய்யவும், தொகுதியின் வளர்ச்சி மற்றும் குறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். சேலம் மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். அங்கு சுகாதார வசதி இல்லை. ஸ்கேன் எந்திரம் இயங்கவில்லை. ஜெனரேட்டர் இயங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் சுதந்திரமாக பணிபுரியவில்லை.
கடந்த ஒரு ஆண்டு ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. பிளஸ் 2, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு பல இடங்களில் லேப்டாப் வழங்கப்படவில்லை. கோடை காலம் துவங்கியுள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. எனக்கு மடியில் கனமில்லை. நான் மக்களுடன் போராட தயாராக இருக்கிறேன்.
கடந்த கால ஆட்சியில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் நான் கட்சி துவங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. தமிழகத்தில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை மின் தடை உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மணல் கொள்ளை குறித்து சட்டசபையில் பேச முடியவில்லை. நான் மக்களிடம் மனுக்களை பெறுவதுபோல மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மனு பெற தயாராக உள்ளனரா? விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை நான் முழுமையாக படித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளேன்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது சஸ்பென்ஸ் என்றார் விஜயகாந்த்.
No comments:
Post a Comment