போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலாக வீசியது. ராஜீவ்காந்தியின் இமேஜை இந்த விவகாரம் கடுமையாக பாதித்தது.
சுவீடனில் இருந்து போபர்ஸ் பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட வகையில், ராஜீவ்காந்தி, சோனியாவின் உறவினர் குவாத்ரோச்சி மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதையடுத்து பீரங்கி பேர ஊழல் விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இந்தியாவிலும், சுவீடனிலும் விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் டெல்லி கோர்ட்டு அளித்த தீர்ப்பில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ்காந்தியின் பங்கு பற்றிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. அப்போது ராஜீவ் காந்தி உயிருடன் இல்லை. அதே சமயம், பீரங்கி பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட குவாத்ரோச்சி மற்றும் சிலருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ. சொன்னதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து விசாரணை நடத்திய சுவீடன் முன்னாள் போலீஸ் துறை தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ரோம், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து விவரித்தார். அவர் கூறியதாவது:-
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு உண்டு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சியை காப்பாற்ற இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும் (சுவீடன்) அவர் தீவிரமாக முயன்றார்.
அவரை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்காக பல்வேறு இந்திய நிறுவனங்களும், அப்பாவிகளும் தண்டிக்கப்பட்டனர். குவாத்ரோச்சியை விசாரிக்க இந்திய விசாரணை அமைப்பு எங்களை அனுமதிக்கவில்லை.
குவாத்ரோச்சி உள்ளிட்ட சிலருக்கு முன்னணி நிறுவனமாக ஏ.இ.சர்வீசஸ் மூலம்தான் லஞ்சம் தரப்பட்டது. லஞ்சப் பணம் நேரடியாக தராமல் குவாத்ரோச்சி வங்கி கணக்கில் போடப்பட்டது. பேரம் பேசப்பட்டது, லஞ்சப்பணம் கைமாறியது எல்லாமே ஜெனீவாவில்தான் நடைபெற்றது.
இதுபற்றி போபர்ஸ் பீரங்கி நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்ட்போ எழுதி வைத்துள்ள குறிப்பில், இந்த குற்றச்சாட்டில் மிஸ்டர் என் (அருண்நேரு) சிக்கியதை பற்றிய யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால், மிஸ்டர் கியூவின் (குவாத்ரோச்சி) அடையாளம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டது. ஏனெனில், அவர் மிஸ்டர் ஆர்-ன் (ராஜீவ்காந்தி) நெருக்கமானவர் என்பதால் இந்த அக்கறை காட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
சுவீடனுக்கு வந்திருந்த இந்திய விசாரணை குழுவினர், ஒரு பட்டியலை என்னிடம் தந்து, அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்குமாறு கூறினார். அதில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர் இருந்தது.
மேலும், இங்குள்ள பத்திரிகையான டோஜன்ஸ் நைஹெட்டர் மூலம் அமிதாப்பச்சனுக்கும் தூண்டில் போடப்பட்டது. விசாரணையில் போபர்ஸ் பேர ஊழலில் அமிதாப்பச்சனுக்கோ அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ துளியளவுகூட தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.
சுவீடன் பத்திரிகையில், இவர் மற்றும் சிலரது பெயர் அனாவசியமாக வெளியான காரணமாக இருந்தவர்கள் இந்திய விசாரணை அமைப்பை சேர்ந்த குழுவினர்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment