மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாநிலங்களவை எம்.பி.க்களில் பெரும்பாலோனார் வரவேற்றுள்ளனர்.
காங்கிரஸில் உள்ள இப்போதைய பிரச்னைகளை திசை திருப்பும் வகையிலேயே சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதாக சிவசேனை எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தலைவர் மீரா குமார், மாயாவதி (பகுஜன் சமாஜ்), முலாயம் சிங் யாதவ் (சமாஜவாதி), சுதிப் பந்தோபாத்யாய (திரிணமூல்), ராஜ் பப்பார் (காங்கிரஸ்) ஆகியோர் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெயூத், "சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அவரை எம்.பி.யாக நியமித்திருப்பது எல்லோரிடத்திலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அவர் இப்போதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஓய்வுபெறவில்லை. ஏன் அவருடைய பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கவில்லை.
காங்கிரஸில் இப்போதுள்ள பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவே அவர்கள் சச்சினை பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எதை செய்தாலும், அது அரசியல் காரணங்களுக்காகத்தான் இருக்கும். சச்சின் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்' என்றார்.
அரசியல் காரணத்துக்காகத்தான் சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்த காங்கிரஸ் எம்.பி. சத்யவிரத சதுர்வேதி, "தனிப்பட்ட ஒருவரைவிட அரசு, நாடு, நாடாளுமன்றம் ஆகியவை உயர்ந்தவை.
ஒரு கட்சி அல்லது அரசின் தலையெழுத்தை தனி ஒருவரால் மாற்றிவிட முடியாது.
இந்த விஷயத்தில் சிவசேனை கட்சியினர் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். இதற்கு முன்பு இதுபோன்று நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலங்களவையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். எம்.எஸ்.சுவாமி நாதன், ஷபானா ஆஸ்மி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பை யாராவது மறுக்கமுடியுமா?' என்றார்.
"சச்சின் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவரின் நியமனத்தை வரவேற்கிறேன்' என்று மீரா குமார் தெரிவித்துள்ளார்.
"விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நல்ல முடிவு' என்று முலாயம் சிங் கூறியுள்ளார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் சுதிப் பந்தோபாத்யாய கூறுகையில், "அற்புதமான முடிவு. இது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்' என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ராஜ் பப்பர் கூறுகையில், "சச்சின் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை எம்.பி.யாக்கி கெளரவிக்க வேண்டிய நேரமிது. அவர் காங்கிரஸில் இணையாவிட்டாலும், நேர்மறையான எண்ணத்தோடே காங்கிரஸால் எம்.பி.யாக்கப்பட்டுள்ளார் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், "அரசு கிரிக்கெட்டை மட்டும் ஆதரிக்குமானால் அதை ஏற்க முடியாது. கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான விளையாட்டுகளும், வீரர்களும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் அரசு சிந்திக்க வேண்டியது அவசியம்.
முன்னாள் கேப்டன் கங்குலியின் பெயரையும் எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும். திரைப்படத் துறை, எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கலாசார மற்றும் இலக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்களையும் எம்.பி.யாக்க வேண்டும். இந்தியா தொழிலாளர்களின் நாடு, எனவே இங்கு தொழிலதிபர்களை எம்.பி.யாக்கக்கூடாது' என்று வலியுறுத்தினார்.
சச்சினை எம்.பி.யாக்கியதில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது சரியானதல்ல என்று கூறிய மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், "நாங்கள் ஒரு விளையாட்டு வீரரை கெளரவிக்காவிட்டால், விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். நிச்சயம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment