ஹவ் டூ நேம் இட்... இசைஞானியின் ரசிகர்களின் ரத்தத்தில், சுவாசத்தில் கலந்த இந்தப் பெயரை மறக்க முடியுமா... வெளியாகி, இசை வானில் சிறகடித்து, இன்னிசையால் இதயங்களை நனைய வைத்து, இளக வைத்து, உருக வைத்து, அழ வைத்து 25 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது ஹவ் டூ நேம் இட்.
1986ம் ஆண்டு வெளியான ஹவ் டூ நேம் இட் அக்காலத்தில் பெரும் இசை லயிப்பலைகளை ஏற்படுத்திய இசைஞானியின் இசை மழைத் தொகுப்பாகும். அதுவரை திரையிசைப் பாடல்களை மட்டுமே கேட்டு வந்த இந்திய இசை ரசிகர்களின் காதுகளை இளையராஜாவி்ன் இந்த இசை ஆல்பம் புதியதொரு பாணியில் லயிக்க வைத்தது.
இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கலவையாக அமைந்த ஹவ் டூ நேம் இட் இசை ஆல்பத்தில் இடம் பெற்றிருந்த இரு இசைக் கலவைகளை தியாகையருக்கும், ஜெர்மனி இசை மேதை ஜே.எஸ்.பாக்குக்கும் சமர்ப்பித்திருந்தார் இளையராஜா.
இந்திய இசையமைப்பாளர் ஒருவர் வெளியிட்ட முதல் இசை ஆல்பம் என்ற பெருமை ஹவ் டூ நேம் இட்டுக்கு உண்டு. இன்று அந்த இசைத் தொகுப்பு 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஹவ் டூ நேம் இட் தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை அம்பி சுப்பிரமணியமும், ராஜேஷ் வைத்யாவும் நேரடியாக ரசிகர்களுக்கு இசைத்து வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இசைஞானியின் இசைப் படையில் இணைந்துள்ள 40க்கும் மேற்பட்ட இசை வீரர்கள் கலந்து கொண்டு காதுகளுக்கு களிப்பூட்டவுள்ளனர்.
No comments:
Post a Comment