கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளராகவோ, வர்னணையாளராகவோ அல்லது ஏதாவது சமூக சேவையிலோதான் சச்சின் ஈடுபடுவார் என நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ராஜ்யசபா உறுப்பினராவார், ஒரு கட்சி கொடுத்த சீட்டை ஏற்பார் என நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று சச்சினுடன் கிரிக்கெட் விளையாடியவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கொடுத்த ராஜ்யசபா சீட்டை சச்சின் பெற்றது குறித்து இருவிதமான கருத்துக்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. பலர் இதை வரவேற்றுள்ளனர். இருப்பினும் சச்சின் இதை ஏற்றது சரியல்ல என்பது போலவும் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேகர் சச்சின் முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சச்சினைப் போலவே மஞ்ச்ரேகரும் மும்பையைச் சேர்ந்தவர்தான். இருவரும் இணைந்து மும்பை அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் ஆடியுள்ளனர்.
சச்சின் எம்.பியாகியிருப்பது குறித்து அவர் கூறுகையில், எனக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சிதான் மேலோங்கியது. சச்சினை எம்.பியாக்கப் போவதாக எந்தவித முன் செய்தியும் இல்லை. திடீரென செய்துள்ளனர். இது முதல் அதிர்ச்சி என்றால், இந்த வாய்ப்பை சச்சின் ஏற்றுக் கொண்டது 2வது அதிர்ச்சி, அதை விட பெரிய அதிர்ச்சி.
ஓய்வுக்குப் பிறகு சச்சின் என்ன செய்ய வாய்ப்புள்ளது என்று நான் யோசித்துப் பார்த்தபோது, கிரிக்கெட் சம்பந்தமான ஒன்றில் அவர் ஈடுபடலாம் - பயிற்சியாளராகலாம், டிவி வர்னணையாளராகலாம், வர்த்தகத்தில் ஈடுபடலாம், சமூக சேவையில் ஈடுபடலாம். இப்படித்தான் தோன்றியது. ஆனால் எனது கனவில் கூட அவர் எம்.பியாவார் என்பதை நினைக்க முடியவில்லை.
நாடாளுமன்றத்திற்கு செல்ல சச்சினுக்கு நேரம் கிடைப்பதில் சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். முன்பு போல அவர் அனைத்துப் போட்டிகளிலும் ஆடுவதில்லை. எனவே அவர் நாடாளுமன்றத்திற்குப் போக சிரமம் இருக்காது. அவர் போக வேண்டும் என்பதையே மக்களும் விரும்புவார்கள்.
இயற்கையிலேயே அமைதியானவர் சச்சின். எது குறித்தும் வெளிப்படையாக கருத்து கூற மாட்டார். பொது விஷயங்கள் குறித்தும் அவர் பேசியதாக நினைவில்லை. எனவே எம்.பி பதவி என்பது முற்றிலும் வித்தியாசமான சவாலாக அவருக்கு இருக்கும் என்றார் அவர்.
No comments:
Post a Comment