மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டிஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை பத்திரமாக மீட்பது குறித்த முக்கிய ஆலோசனை டெல்லியில்நடந்தது. இதில் சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலான தமிழகத்தைச் சேர்ந்த கே.விஜயக்குமார் கலந்து கொண்டார். இதனால் இந்த ஆபரேஷனில் விஜயக்குமார் களம் இறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் முயற்சியில் தற்போது சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸார்தான் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் தலைவரான கிஷன்ஜி சுட்டு வீழ்த்தப்பட்டார். அதன் பின்னணியில் சிஆர்பிஎப் தலைவரான விஜயக்குமார் இருந்ததாக பேச்சு அடிபட்டது.
தமிழகத்தில் தலை சிறந்த காவல்துறை அதிகாரியாக விளங்கியவர் விஜயக்குமார். வீரப்பன் வேட்டை, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர், அயோத்தியா குப்பம் வீரமணி என்கவுண்டர் உள்ளிட்டவற்றுக்கு இவர் பெயர் போனவர். தற்போது சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலாக இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அலெக்ஸ் பால் மேனன் மீட்பு நடவடிக்கையில் விஜயக்குமாரின் நேரடி உத்திகள் செயல்படுத்தப்படவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. இதில் விஜயக்குமார் கலந்து கொண்டார். மேலும், சட்டிஸ்கர் மாநில ஏடிஜிபி ராம் நிவாஸ், ராய்ப்பூர் மாவட்ட ஐஜி பங்கஜ் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது கலெக்டரை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், அப்போது விஜயக்குமார் பல யோசனைகளைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே அலெக்ஸ் பால் மேனன் விவகாரம் மேலும் பரபரப்படைந்துள்ளது.
No comments:
Post a Comment