சென்னை, கிண்டியில் உள்ள ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த ‘கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு மையம்‘ திறப்பு விழா நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் செய்திருந்தனர்.
சென்னையில் உள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது.
தமிழக செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் புதிய பயணிகள் முன்பதிவு மையத்தை திறந்து வைப்பார் என்றும், விழாவில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை அதிமுக எம்பியான ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டு இருந்தது.
அழைப்பிதழில் குறிப்பிட்டப்படி, காலை 10.35 மணிக்கு சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் விழா மேடைக்கு வந்தார். அவருடன் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லியும் வந்தார்.
விழா 11 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தும், செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் மேடைக்கு வரவில்லை. அவரது வருகைக்காக ரயில்வே அதிகாரிகளும், மற்ற சிறப்பு அழைப்பாளர் களும் காத்திருந்தனர்.
இந்நிலையில் 11.35 மணிக்கு அமைச்சர் செந்தமிழன் கிண்டி ரயில் நிலையத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். அவரை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்தராமன் வரவேற்று இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.
விழா மேடையில் திமுகவை சேர்ந்த சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், வசந்தி ஸ்டான்லி எம்பியும் உட்கார்ந்திருந்ததை பார்த்த அமைச்சர் செந்தமிழன் நேராக கணினி முன்பதிவு மையம் அமைக்கப்பட்ட இடத்திற்கு சென்றார்.
கத்திரிக்கோலை வாங்கி ரிப்பனை ‘கட்’ செய்தார். பின்னர் முன்பதிவு மையத்திற்குள் சென்று விட்டார். இதைப்பார்த்த மேயரும், திமுக எம்பியும் அமைச்சர் இருந்த பகுதிக்கு சென்றனர். இதையும் கவனித்த அமைச்சர், விழா நிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்து, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
No comments:
Post a Comment