கடந்த ஆட்சியில் சினிமாக்களின் பெயர்கள் தமிழில் வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது. தமிழில் பெயர் வைக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இந்த சலுகை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் இந்தச் சலுகையை பல சினிமாக்கள் தவறாக பெற்று வந்ததாக பேசப்பட்டது. வரி சலுகைக்காக ஒரு எழுத்து, இரண்டு எழுத்துகளில் பெயரும், அடைப்புக்குறிக்குள் வேறு ஒரு பெயரும் வைத்துக் கொண்டும் சில சினிமாக்கள் வெளிவந்தன. வரி விலக்கு பெற தகுதியில்லாத திரைக்கதைகளை கொண்ட சில சினிமாக்களும் தமிழில் பெயர் வைத்த ஒரே காரணத்திற்காக இந்த சலுகையை அனுபவித்தன.
இப்போது இந்த வரிச்சலுகையை பெற மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் வன்முறை, ஆபாசம், பண்பாடற்ற திரைக்கதைகள் கூடாது என சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் சுனீல் பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
22.7.2006ல் தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் கேளிக்கை வரி விலக்கு பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 30.3.2007ல் தமிழ் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும் கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.
22.8.2007ல் கேளிக்கை வரிச்சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிடப்பட்டால் மட்டுமே அத்திரைப்படங்களின் கதைக்கரு தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என உறுதி செய்ய இயலவில்லை.
மேலும் சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டதால் மட்டுமே கேளிக்கை வரி விலக்கு பெற்று விடுகின்றன. மேற்கண்ட சூழ்நிலையில் கேளிக்கை வரிச் சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்கண்ட கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
* அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து `யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். * திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். * திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம்பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.
மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரி விலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என அரசு ஆணையிடுகிறது. அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment