ஊழலுக்கு எதிரான லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த வரைவு மசோதாவில், பிரதமர், நீதித்துறையினரை லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இல்லாததால், மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஸாரே குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, டெல்லி ஜந்தர் - மந்தரில் ஆகஸ்ட் 16-ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருப்பதாக அண்ணா ஹஸாரே அறிவித்தார்
*
சட்ட விரோத சுரங்கத் தொழில் தொடர்பான லோக் அயுக்தாவின் விசாரணை அறிக்கையின் குற்றச்சாட்டு எதிரொலியாக, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு எடியூரப்பாவுக்கு பிஜேபி மேலிடம் உத்தரவிட்டது.
*
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5-க்குள் வழங்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, ஆகஸ்ட் 2-க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியதால், இதற்கான கால அவகாசத்தை நீதிபதிகள் நீட்டித்தனர்.
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையிட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வாதம் நடந்துள்ள நிலையில், அன்றைய தினம் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் அர்ஜூனா வாதிடுவார்.
*
திமுக உள்ளிட்ட சில கட்சிகள் மாணவர்களைத் தூண்டிவிட்டு, சமச்சீர் கல்வி விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முயல்வதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்தது.
*
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று திமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என தமிழக நர்சரி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
*
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித்துறைச் செயலாளராக இருந்த டி.சுப்பாராவ் ஆகியோர் மீது தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் மறுத்துள்ளார்.
*
காமன்வெல்த் ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை ஸ்கேன் மூலம் மூளை பரிசோதனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், தாம் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானது என்று கூறினார்.
*
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
*
சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து சனிக்கிழமை முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
*
நிலப்பறிப்பு மற்றும் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய திமுக பிரமுகர் 'அட்டாக்' பாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
*
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,183 ரூபாயாக இருந்தது.
*
மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 222 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 56 புள்ளிகள் சரிந்திருந்தது.
*
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது.
*
லார்ட்ஸ்சில் முதல் டெஸ்ட்டை இழந்த இந்திய அணி, இப்போட்டியில் இலங்கிலாந்துக்கு பதிலடி தரும் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment