ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் மீது சில குற்றச்சாட்டுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கோர்ட்டில் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் ராசாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர் சபீர் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மையை எடுத்து வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் ராசாவின் உருவபொம்மையின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க போகும் நேரத்தில் சபீருக்கு ஒரு போன் வந்தது.
`தலைவர் பேசுகிறார்...பேசி விட்டு வருகிறேன்' என்று அங்கிருந்த தன்னுடைய சக தொண்டர்களிடம் கூறி விட்டு ஒரு மறைவான இடத்திற்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்தவர் அங்கு நின்ற தொண்டர்களிடம், `கூட்டணிக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்று தலைவர் சொல்கிறார். அதனால் உருவபொம்மையை எரிக்க வேண்டாம்' என்றார்.
இதற்கிடையே உருவபொம்மை எரிப்பு குறித்த தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்குள் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்து விட்டனர்.
உருவபொம்மைக்கு யாராவது தீ வைத்து விட்டால் பிரச்சினை ஆகி விடும் என்று நினைத்த அவர்கள், உடனடியாக பாட்டிலில் தண்ணீர் பிடித்து வந்து உருவபொம்மை மீது ஊற்றினர்.
புகைப்படக்காரர்கள் படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த தொண்டர் ஒருவர் உருவபொம்மையை எடுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி பவனை சுற்றி சுற்றி ஓடினார். எங்கே உருவபொம்மையை ஒளித்து வைப்பது என்று இடம் தேடி அலைந்தார்.
பின்னர் அவர்கள் உருவபொம்மையை சத்தியமூர்த்தி பவன் சுற்றுச்சுவர் அருகே இருந்த முள்புதருக்குள் தூக்கி வீசி உருவபொம்மையை பிய்த்து எரிந்தனர்.
No comments:
Post a Comment