சிங்கப்பூரில் வசிப்பவர் பத்மா (வயது 64). தொழிலதிபரான இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
எனக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள பங்களா வீடு ஒன்று சென்னை சாஸ்திரி நகர் 1 வது அவென்யூவில் உள்ளது. அந்த வீட்டை சங்கர் (எ) மனோகரன் (54) என்பவரிடம் ஒப்படைத்து, அதை பார்த்துக்கொள்ளும்படி கூறியிருந்தேன். அதற்காக அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பணமும் கொடுத்து வந்தேன். ஆனால் சங்கர் எனது பங்களா வீட்டை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக அறிந்தேன். சினிமா படப்பிடிப்புக்கும் எனக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து உள்ளார்.
சங்கர் சினிமாவில் துணை நடிகராக உள்ளார். அவரது சட்டவிரோத செயல்களால் வீட்டை காலி செய்யும்படி கூறினேன். ஆனால் போலி ஆவணங்களை தயாரித்து நான் அந்த வீட்டை ரூ.10 லட்சத்திற்கு குத்தகைக்கு கொடுத்ததாகவும், அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று கோர்ட்டிலும் வழக்கு போட்டுவிட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, உதவி கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். துணை நடிகர் சங்கர் 25.07.2011 அன்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் போலீஸ் விசாரணையில், தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மேற்கண்ட தகவல்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment