2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி, டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர், தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவரே வாதாடினார்.
முந்ததைய அரசு வகுத்த கொள்கைப்படிதான் நானும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தேன். நான் செய்தது தவறு என்றால், 1993-ம் ஆண்டு முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த முன்னாள் மந்திரிகளையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முந்தைய அரசுகள் கையாண்ட வழிமுறைகளையே நானும் கடைப்பிடித்தேன்.
இது பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், அப்போதைய நிதி மந்திரி மந்திரி ப.சிதம்பரத்துக்கும் தெரியும்'' என்று ராசா வாதாடுகையில் குற்றம் சாட்டினார். அலைவரிசை ஒதுக்கீட்டு பிரச்சினை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அப்போதைய நிதி மந்திரிப.சிதம்பரத்துக்கு தெரியும் என்று டெல்லி கோர்ட்டில் ஆ.ராசா நேற்று தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி நேற்று வற்புறுத்தினார். ஆனால், பிரதமர் பதவி விலக தேவையில்லை என்று கூறிய காங்கிரஸ் கட்சி, ராசாவின் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. ``குற்றவாளியான ஆ.ராசா கூறும் கருத்துக்கள், குற்றவாளி தன்னை பாதுகாத்துக்கொள்ள கூறும் புகார்கள்'' என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு குற்றவாளி மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, அவர் தன்னைக் காத்துக் கொள்ள கூறும் புகார் போன்றது ஆ.ராசா கூறும் குற்றசாட்டுகள். மந்திரிசபையில் உள்ள ஒருவர் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வில்லை. ஒரு குற்றவாளிதான் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
இது இந்திய ஜனநாயகத்துக்கு சோகமான நாள் ஆகும். ராசாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது. அவரை இவ்வாறு இழிவு படுத்துவது, மாசுபடுத்துவது, அவரது பெருமைகளை குலைப்பது எப்படி இருக்கிறது என்றால், சூரியன் மீது எச்சில் துப்புவது போன்றது ஆகும். ஏனென்றால், பிரதமர் மன்மோகன்சிங்கின் நேர்மையை, ஒருமைப்பாட்டை, நாணயத்தை பற்றி இந்த உலகமே நன்கு அறியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி மந்திரி ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கூறுவது குறித்து, மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில், ``ஒரு குற்றவாளி கோர்ட்டில் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஆதாரமாகவோ, சாட்சியமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது'' என்று கூறினார். மன்மோகன்சிங் மீது ராசா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார். ``அவர் (ஆ.ராசா) கோர்ட்டில் சில தகவல்களை தெரிவித்து உள்ளார். அதுகுறித்து நாங்கள் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்?'' என்று அவர் கேட்டார்.
No comments:
Post a Comment