மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 21 பேர் மீது மதுரை மேலூர் கோர்ட்டில் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க. அழகிரி சென்றார். கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இதனால், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்த மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் இருந்த சிலர் தன்னை அடித்து உதைத்தனர் என்று தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 , 341, 332, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார்.
தாசில்தார் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த வழக்கில் அழகிரி முன் ஜாமீன் பெற்றார்.
பின்னர் தாசில்தார் காளிமுத்து தன்னை யாரும் தாக்கவில்லை என்று புகார் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று மேலூஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி, அழகிரி உட்பட சம்பவத்தில் ஈடுபட்ட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மேலூஎ மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து கோர்ட் நாளை முடிவு செய்யும் என்று நீதிபதி அறிவித்தார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த மு.க.அழகிரி, கடந்த இரண்டு தினங்களாக திருச்சி, மதுரை சிறையில் இருக்கும் திமுகவினரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment