புயல் அடித்து ஓய்ந்தது போலத் தோன்றினாலும் கர்நாடக பாஜகவில் மிகப் பெரிய சுனாமி இனிமேல்தான் வரப் போவதாகத் தோன்றுகிறது. காரணம் பாஜகவில் மிகப் பெரிய பூகம்பத்திற்குத் தயாராகி வருகின்றனர் எதியூரப்பா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டார் ஆதரவாளர்கள் என்று பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கர்நாடக பாஜகவில் கடந்த சில நாட்களில் மிக மிக பரபரப்பான சினிமாவை விஞ்சும் காட்சிகள் நடந்தேறியுள்ளனவாம். இந்தத் தகவல்களை பாஜகவினரே கூறியுள்ளனர்.
காட்சி 1
முதல்வர் பதவியிலிருந்து விலக எதியூரப்பா கட்சித் தலைமைக்கு சில நிபந்தனைகளைப் போட்டார். அதில் ஒன்று தனது ஆதரவாளரான சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும் என்பது.
கெளடாவை முதல்வராக்க அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டார் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாஜக தலைமையும், கெளடா முடியாதே என்று எதியூரப்பாவிடம் தெரிவிக்க வெகுண்டாராம் எதியூரப்பா.
அப்படியானால் என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடியாது. விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன். இதை நான் சாதாரணமாக சொல்லவில்லை. மிக மிக சீரியஸாகவே சொல்கிறேன் என்ற ரீதியில் அவர் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்து ஆடிப் போய் விட்டதாம். எதியூரப்பா பிடிவாதக்காரர் என்பதை பலமுறை அனுபவித்துப் பார்த்து விட்ட அவர்கள், சொன்னதைச் செய்தாலும் செய்து விடுவார் என்று பயந்து விட்டார் என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன.
காட்சி 2
சதானந்தா கெளடாவை முதல்வராக்க எதியூரப்பா தரப்பு மிகப் பெரும் விலையை கொடுத்துள்ளதாம். அதாவது கெளடாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா ரூ. 2 கோடி வரை எதியூரப்பா தரப்பு பணம் கொடுத்துள்ளதாம். இந்தத் தகவலை வேறு யாரும் சொல்லவில்லை, பாஜகஎம்.எல்ஏ பாலச்சந்திர ஜார்க்கிஹொலி என்பவர்தான் அம்பலப்படுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏக்களுக்குப் பணம் கொடுத்துத்தான் எதியூரப்பா முதல்வர் தேர்வில் வென்றுள்ளார். இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் விளையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர் ஜெகதீஷ் ஷெட்டார் தரப்பைச் சேர்ந்தவர்.
காட்சி 3
முதல்வர் பதவிப் போட்டியில் எதியூரப்பாவிடம் தோல்வி அடைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்- கிட்டத்தட்ட 30 பேர்- கெளடா பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனராம். மேலும், நாளை இவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் கூடிப் பேசப் போவது எதற்காக என்பது தெரியவில்லை. கட்சியை உடைக்கும் திட்டமா அல்லது நல்ல இலாகாவைப் பெறுவதற்காக நடத்தும் டிராமாவா என்பது தெரியவில்லை. ஆனால் ஷெட்டார் தரப்பு, எதியூரப்பா தரப்புக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என்று பாஜக தரப்பிலேய உறுதியுடன் கூறுகிறார்கள்.
கர்நாடக பாஜகவில் நடந்துள்ள, நடந்து வரும், நடக்கப் போகிற பரபரப்புச் சம்பவங்களால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment