தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது ஐ.நா. சபை பொருளதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.
இதை விமர்சித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தேபய ராஜபக்சே விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். இதை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாசிலை அருகில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கோத்தேபயே ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். போலீசார் ஓடிவந்து அந்த கொடும் பாவியை பிடுங்கி தீயை அணைத்தனர்.
ஆர்பாட்டம் குறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
உலகளவில் மக்களின் உயிரை மதிக்காமல் இனபடுகொலை செய்யும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பது நடைமுறையில் உள்ள ஒன்று. இதன் அடிப்படையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அம்மா வலியுறுத்தினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தின்மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே வேளையில் படுகொலைக்கு காரணமான இலங்கை எம்.பி.க்கள் இந்தியாவிற்கு வந்தபோது மத்திய அரசு அவர்களுக்கு வெண்சாமரம் வீசியது. மத்திய காங்கிரஸ் அரசு தமிழின விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அம்மாவின் கருத்தை தவறாக விமர்சனம் செய்த இலங்கை அரசையும், ராஜபக்சேவின் தம்பியை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆணவத்துடன் பேட்டியளித்துள்ள இலங்கை ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு காலத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அம்மாவின் அனுமதிபெற்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்

No comments:
Post a Comment