அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் மீண்டும் ஜெயலலிதாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் இன்று எதிர்ப்புத் தெரிவிக்கப்படாத காரணத்தால், அவருக்கு மேலும் ஒரு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூண்டோடு கட்சியை விட்டு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளில் தம்பி திவாகரன், உறவினர் ராவணன், கணவர் நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சசி குடும்பத்தைச் சேர்ந்த மகாதேவன் அடுத்துக் கைது செய்யப்படவுள்ளதாகவும், தொடர்ந்து சசிகாலவே கைதாகப் போகிறார் என்றும் செய்திகள் பரவின. அதன்படி மகாதேவன் மீது வழக்குப் பாய்ந்தது. அவரைப் போலீஸார் தேடி வர ஆரம்பித்தனர்.
இதையடுத்து சசிகலா தரப்பில் திடீரென ஒரு அறிக்கை வெளியானது. அதில் முதல்வர் ஜெயலலிதாவை வரிக்கு வரி பாசத்துடன் அக்கா என்று அழைத்திருந்த சசிகலா, அக்காவுக்காகத்தான் நான் இருக்கிறேன். அக்காவுக்குத் துரோகம் செய்தவர்கள் எனக்கும் துரோகிகளே. அக்காவுக்கு தொடர்ந்து சேவை செய்யக் காத்திதிருக்கிறேன் என்று உருகியிருந்தார். மேலும் அக்காவுக்காக எனது குடும்பத்தினரை உதறுகிறேன் என்றும் மேலும் உருகியிருந்தார். இதை ஏற்ற ஜெயலலிதா சசிகலாவின் அறிக்கையை ஏற்பதாக அறிவித்தார். அதேசமயம், அவரது குடும்பத்தினர் மீதான நடவடிக்கை நீடிப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தற்போது காட்சிகள் மாற ஆரம்பித்துள்ளன. சசிகலா குடும்பத்தினர் மீது பாய்ந்த வழக்குகளிலிருந்து அவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டும், ஜாமீன் தர கோர்ட்களில் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தும் வந்த காவல்துறையினர் தற்போது அதிலிருந்து மாறத் தொடங்கியுள்ளனர்.
சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்தின் நட்பைப் பெற்ற பின்னர் தாக்கலான முதல் ஜாமீன் வழக்கில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
திவாகரன் மீது அவரது கல்லூரி மாணவியர் தலைவியின் காதலர் சரவணன் என்பவரை மிரட்டிப் பணம் பறித்த வழக்கு, தஞ்சை மாவட்டம் ரிஷியூரில் பெண்ணின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது உள்பட பல வழக்குகள் போடப்பட்டன. இதில் சரவணனை மிரட்டி பணம் பறித்தது தொடர்பான வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கிலும் திவாகரனுக்கு இன்று ஜாமீன் கிடைத்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி திவாகரன் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து ரூ. 10,000 மதிப்பிலான இரு நபர் ஜாமீனில் திவாகரனை விடுவிக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல திவாகரன் மீதான பிற வழக்குகளிலும் கூட அவருக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க காவல்துறை மறைமுகமாக உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாகரனுக்கு கிடைத்துள்ள இந்த கருணை, நடராஜன், ராவணன் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment