இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, சொந்த விஷயமாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசிய அவர், ’பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒழிக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டது, தற்போதைய இலங்கை அரசுக்கு, அங்குள்ள தமிழர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
மேலும், போர் முடிவுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகியும் இலங்கை தமிழர்களுக்கு, இந்தக் கால கட்டத்தில் அதிகமான மறு வாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய சந்திரிகா, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, இலங்கை அரசில் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல் மறு வாழ்வுப் பணிகளை பொறுத்தவரை, இலங்கை அரசு இன்னும் அதிகமான பணிகளைச் செய்திருக்க வேண்டும் என்றும் சந்திரிகா கூறினார். இலங்கை தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக, கடுமையான பாதிப்பிற்கும், பாகுபாட்டிற்கும் ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment