Saturday, July 30, 2011

அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!

அஜித்குமார் நடிக்கும் 50-வது படமான மங்காத்தாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படப் பாடலான பல்லேலக்காவின் சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

மங்காத்தா பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபுவே லீக் செய்து பரபரப்பு கிளப்பி வருகிறார்.

காரணம் என்னவோ... எல்லாம் பப்ளிசிட்டிதான்!

அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் ரஜினியின் சிவாஜி படத்தில் இடம்பெறும் 'பல்லேலக்கா' பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு கூறுகையில், "ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்," என்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்!




நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!

 ரூ.3கோடி செக்மோசடி செய்த வழக்கில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட 6 பேருக்கு கோர்ட் பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஓபராய் மல்டிமீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தை உள் மற்றும் வெளிநாடுகளில் விரிவுப்படுத்துவதற்காக, மும்பைச் சேர்ந்த ஜவகர்லால் அகிச்சா என்ற பைனான்சியாரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

பணத்தை திரும்ப செலுத்த கொடுக்கபட்ட செக் பணமில்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து, விவேக் ஓபராய், அவரது தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட 6 பேர் மீது செக்மோசடி வழக்கு தொடுத்தார்.

மும்பை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் பெயில் இல்லாத பிடிவாராண்ட் பிறக்கப்பட்டது.




உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி! - ராமதாஸ்

 வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

இதுபற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்.

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு நேரடி வாய்ப்பு 
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியமர்த்துவது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அரசு கைவிட்டு பழைய முறையிலேயே பணியமர்த்த வேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 20-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்
2-வது முறையாக வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. அன்று திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

பா.ம.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசு தொடர்ந்துள்ளது. இது மாதிரியான பழிவாங்கும் போக்கை கைவிட்டு மக்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் தீர்க்க வேண்டும். தமிழகத்தில் இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மதுகடைகள் மூலம் அதிக வருமானம் ஈட்ட அரசு முயற்சித்து வருகிறது.

மது அருந்த வயது வரம்பு
நியாய விலைக்கடைகள் புதிதாக திறக்கப்படாமல் பல மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படுகின்றன. கேரளாவில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்கப்படுவதில்லை. அதேபோல் மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை. 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் காட்டும் வழியில் தமிழக அரசும் செயல்பட்டு முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவி, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற பதவிகள் கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.




மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் கைது

மதுரையை சேர்ந்த இளம்பெண் கற்பழி்ப்பு வழக்கில், பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கற்பழிப்பு வழக்கில், 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, இதுவரை 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை பல இடங்களுக்கு அனுப்பி, விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்த பிரியா(30) என்ற அவரிடம் நடத்திய விசாரணையில், ஏழ்மையில் தவிக்கும் பல பெண்களை மூளை சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு, வெளியூர்களில் இருந்து விபசார புரோக்கர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் முக்கியஸ்தர்களிடம் விபசார பெண்களை அனுப்பி, பதவிஉயர்வு, இடமாற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பலருக்கும் பெற்று தருவதில் பிரியா முக்கிய பங்காற்றி உள்ளார்.

ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரியா, கோர்ட் உத்தரவின்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.




அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி

அதிமுகவின் அடக்குமுறை அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்து கருணாநிதியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, "காரணமே இல்லாமல் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக அரசின் பழிவாங்கும் மனப்பான்மையை காட்டுகிறது.

திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது நடைபெறும் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அறப்போராட்டம் அமைதி வழியில் திட்டமிட்டபடி நடைபெறும்

காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்பதற்காகவும், பொய் வழக்குப் போடுவதை கண்டிப்பதற்காகவும் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1ல் அறிவித்துள்ள திமுகவின் அறப்போராட்டம் திட்டமிட்டபடி அமைதி வழியில் நடைபெறும்," என்றார்.




ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர்ப்பாட்டம்...

 ஸ்டாலின் கைதான சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் தேவையற்ற இந்த செயலைக் கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மற்றும் நாகையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எவ வேலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

புதுச்சேரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை திடீரென்று வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல், திருச்செங்கோட்டிலும் சாலை மறியல் நடந்து வருகிறது.

சென்னையில்...
தலைநகர் சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலை மற்றும் வட சென்னைப் பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்தன. போராட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...! -அஜீத் ஆவேசம்


தனது ரசிகர் மன்றங்களை ஏன் கலைத்தார் என்பதற்கு நேரடியாக இப்போதுதான் பதில் சொல்லியிருக்கிறார் அஜீத். குமுதம் வார இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். என்னுடைய படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று மீடியாவில் அடிக்கடி சொல்கிறீர்கள். இதை மனதில் வைத்தே என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் என்னை பற்றியோ, அல்லது என் படம் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள்.

இதனால் என்னுடைய படத்திற்கான ஓப்பனிங் குறையும் என்ற எண்ணம்தான் காரணம். இது மட்டுமில்லாமல் என்னுடைய ரசிகர்களை குறிவைத்து பல புகார்களை கூறி அவர்களை கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது. இதனால் என் மீதும் என் ரசிகர்கள் மீதும் மக்களுக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர். இதுவும் நான் என் மன்றங்களை கலைப்பதற்கு ஒரு காரணம். என் மீதான கோபத்தை என் ரசிகர்கள் மீது காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று மன்றங்களை கலைத்துவிட்டேன். இப்போது வேண்டுமானால் என்னை தாக்குங்கள். இனியும் என் ரசிகர்களை தாக்க வேண்டாம். எனக்கு எதிரிகள் அரசியலில் இல்லை. சினிமாவில்தான் ஒரு சில எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜீத். மங்காத்தா வெளியாகிற நேரத்தில் மீண்டும் தன் ரசிகர்களை அரவணைத்து செல்வதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது திரையுலகத்தில்.



மு.க. ஸ்டாலின் கைது


தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் வந்திருந்தனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது

 திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:
மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:
இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை. 

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:
இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Friday, July 29, 2011

'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!

 லார்ட்ஸில் சதமடிப்பார். அது முடியவில்லையா, பரவாயில்லை டிரன்ட்பிரிட்ஜில் கண்டிப்பாக சத்தாய்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சத்தம் போடாமல் சதம் போட்டுள்ளார் சச்சின். ஆமாம், டிரன்ட்பிரிட்ஜில் இன்று சச்சின் ஆடும் டெஸ்ட் போட்டி, வெளிநாடுகளில் அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும்.

1989ம் ஆண்டு (ஹாவ்...) முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார் சச்சின். இதுவரை 177 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் - சமீபத்தில் முடிவடைந்த லார்ட்ஸ் போட்டியையும் சேர்த்து. இன்று டிரன்ட் பிரிட்ஜில் தனது 100வது டெஸ்ட் போட்டியை அவர் சந்திக்கிறார். அந்த வகையில் சதம் போட்டுள்ளார் சச்சின்.

மேலும் இந்திய வீரர் ஒருவர் அன்னிய மண்ணில் 100 போட்டிகளில் ஆடியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது சச்சினின் சாதனைகளில் மேலும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

அதேசமயம், லார்ட்ஸில் ஏமாற்றிய சச்சின், டிரன்ட்பிரிட்ஜில் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று கருதலாம். காரணம், லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அதிகபட்சம் 37 ரன்கள் வரை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனால் டிரன்ட்பிரிட்ஜில் ஆறு முறை ஆடி 469 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் 78 ஆக உள்ளது. அதில் 1996ம் ஆண்டு 177 ரன்களைக் குவித்துள்ளார். 2002ல் 92 ரன்களையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 91 ரன்களையும் எடுத்துள்ளார். எனவே இந்த முறையும் அவர் சிறப்பான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆறுதல் படலாம்.

மேலும் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரையும் விட சச்சின்தான் அதிக அளவில் ரன்கள் எடுத்துள்ளார். எனவே இந்திய ரசிகர்கள் பெருத்த தெம்புடன் இப்போட்டியைக் காணலாம்.

வெளிநாட்டில் 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின், கூடவே ஒரு சதத்தையும் போட்டு, 100வது சதத்தையும் எடுத்தால் ரசிகர்கள் பூரிப்படைவார்கள்.




தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் நிபுணர் நக்கல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அன்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது,
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயார்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?

ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்.




நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது

 நிலத்தை எழுதித் தர மறுத்த அரவாணியை, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அமுல்ராஜ் என்ற அமுதா (34) அரவாணியான இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 24ம் தேதி கடைக்கு சென்ற அமுதா பின்னர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அதே பகுதியில் காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்ட அவரது தாய் பிலோமினா மேடவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அமுதாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்துள்ள அமுதாவிற்கு, தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரித்தார். அதில், அரவாணி அமுதாவை 5 பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, அடித்து உதைத்தது தெரிந்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பிலோமினா, அப்பகுதியில் வாங்கிய நிலத்தை அபகரிக்க நினைத்த 5 பேர் கொண்ட கும்பல், அமுதாவை மிரட்டி உள்ளது. அதற்கு அமுதா மறுக்கவே, அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியுள்ளதாக பிலோமினா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்டீபன் (24), சுரேஷ் (21), அசோக்குமார் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.




கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

 கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.