ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஊழலுக்கு எதிரான 2வது சுதந்திரப் போராட்டத்தை தொடங்க மக்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனது அமைச்சரவையில் சேர்க்கப்படுபவர்கள் நேர்மையானவர்களா, கறை படியாதவர்களா என்பது குறித்து பிரதமர் தான் ஆராய வேண்டும். அமைச்சரவையில் நேர்மையானவர்களை சேர்ப்பது பிரதமரின் பொறுப்பு.
லோக்பால் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும். அதை வலியுறுத்தி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவோம்.
நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை விரும்புகிறோம். வன்முறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் துப்பாக்கித் தோட்டாக்கள் எங்கள் மீது பாய்ந்தால் அதை ஏந்தவும் நாங்கள் தயார்.
ஆகஸ்ட் 16ம் தேதி பொது மக்கள் அனைவரும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு தெருவில் வந்து ஊழலை ஒழிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் 15ம் தேதி 2வது சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க மக்கள் தயாராக வேண்டும். இந்தப் போராட்டம் ஊழலை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் அமைய வேண்டும் என்றார் ஹஸாரே.

No comments:
Post a Comment