இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீடியோ காட்சிகளை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சானல்-4 என்ற தனியார் டெலிவிஷன் வெளியிட்டது. அது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கொலைக்களம் வீடியோவை பார்த்தவர்களின் உள்ளம் பதை பதைத்து ரத்தத்தை உறைய செய்து மனதை கரைய செய்தது. அந்த கொடூர காட்சிகளை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பார்த்து இருக்கிறார்.
மறைந்த முன்னாள் நீதிபதி அனந்த் பாலகிருஷ்ணனின் நினைவு கருத்தரங்கு கொழும்பில் நேற்று நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகார பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டி பேசினார்.
உரையின் இறுதியில் பேசிய அவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “இலங்கையின் கொலைக்களம்” என்ற தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ காட்சி குறித்து கருத்து வெளியிட்டபோது கண் கலங்கினார். அப்போது அவரது குரல் தழு தழுத்தது. சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்த அவர் பின்னர் தனது உரையை தொடர்ந்தார்.
இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மி அழுதபடி கூறியதாகவும் தெரிவித்தார். இதே கருத்தை தனது மகள் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் நலன் பற்றி தனது குழந்தைகள் சிந்திப்பது குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், இலங்கை அரசியல்வாதிகள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment