சென்னை தீவுத்திடல் அருகே கொடிமர சாலையில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் விளையாடிய சிறுவன் தில்சான் (13) கடந்த மாதம் 3-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டான். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவரை கைது செய்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய பெட்டியை ராம்ராஜ் கூவம் ஆற்றில் வீசி இருந்தார். அதையும் போலீசார் மீட்டனர். புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்ராஜிக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. மீண்டும் வருகிற 8-ந்தேதி (திங்கள்) ஜாமீன் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 104 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். 974 சாட்சியங்கள் மற்றும் முக்கிய தடயங்கள், தடவியல் அறிக்கை ஆகியவை குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 8-ந்தேதி இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது ராம்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். அன்றைய தினம் அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும்.
ராம்ராஜ் மீது கொலை, தடயங்களை அழித்தல், ஆயுதங்களை தவறாக பயன்படுத்துதல், லைசென்சு காலவதியான பிறகும் துப்பாக்கியை ஒப்படைக்காமல் இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் ராம்ராஜுக்கு 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment