பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை ஆகியவற்றுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க மானியத்தை படிப்படியாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகள் கூட்டம் நடந்தது. இதில் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் வழங்குவதால் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில் சமையல் கியாஸ் விநியோகத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசுக்கு சமையல் கியாஸ் அடக்கவிலை சிலிண்டருக்கு ரூ. 642.35 ஆக உள்ளது. இதில் ரூ. 247 மானியம் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு சிலிண்டர் ரூ. 395.35க்கு விநியோகிக்கப்படுகிறது. அரசுக்கு ஏற்படும் ரூ. 247 இழப்பை சமாளிக்க இந்த மானியத்தை அடியோடு நீக்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மானிய விலை சிலிண்டரை வருடத்துக்கு 4 என்ற அளவில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வருமான வரி செலுத்துவோர், அல்லது சொந்தமாக கார்-மோட்டார்சைக்கிள் வைத்திருப்போர், சொந்த வீடு வைத்திருப்போர் ஆகியோருக்கு வருடத்துக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் தேவையான சிலிண்டர்களை ரூ. 642.35 என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
இதே போல் ரூ. 6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலை சிலிண்டரை அடியோடு ரத்து செய்து விட்டு அவர்களுக்கு ரூ. 642.35 என்ற விலையில் வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்து இருந்தது. இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர் ரத்து செய்யப்படுகிறது. அவர்களுக்கும் ரூ. 642.35 விலையிலேயே சிலிண்டர் வழங்கப்படும். தற்போது சராசரியாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் 45 நாள் முதல் 60 நாட்களுக்கு வருகிறது. அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. இதில் இவர்கள் 4 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். 2 சிலிண்டருக்கு மட்டுமே அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். இது மக்களை அதிகம் பாதிக்காது என்றும் கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் சில கியாஸ் ஏஜென்சிகள் முறைகேடில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வருகின்றன.
போலி பெயர்களில் சிலிண்டர்களை பதிவு செய்து வருடத்துக்கு 20 முதல் 30 சிலிண்டர்களை அவர்கள் பயன்படுத்துவது போல் கணக்கு காட்டி அவற்றை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கியாஸ் ஏஜென்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைனில் கியாஸ் புக்கிங் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அதிக வரவேற்பு உள்ளது. இதன் மூலம் முறைகேடு தடுக்கப்படுகிறது. உடனுக்குடன் குறிப்பிட்ட நாளில் தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் கிடைக்கிறது. மேலும் சிலிண்டர் சப்ளை செய்யும்போது நுகர்வோரிடம் இருந்து டோக்கன் சிலிப் பெறும் முறையும் நடைமுறையில் உள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதே போல் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையும் எண்ணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வ தேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் விலை உயர்த்தப்படுகிறது. மண்எண்ணை ஏழைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் செய்வது குறித்தும் மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது

No comments:
Post a Comment