வாரிசு நடிகர்களின் வரிசையில் தனுஷின் வீட்டிலிருந்தும் இன்னொரு ஹீரோ வந்திருக்கிறார். பெயர் வருண். இவர் நடித்த மல்லுக்கட்டு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு சினிமாவை கூட மிஞ்சிவிட்டது. விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் பூர்வ ஜென்மத்தில் ஏதாவது நகைச்சுவை இதழுக்கு இந்த ஜென்மத்துக்கும் சேர்த்து சந்தா கட்டியவர்களாக இருந்திருக்கக் கூடும்.
விழாவின் நாயகர் கவிஞர் வாலி என்றால், இன்னொரு முக்கிய நாயகர் டி.ராஜேந்தர். போதாதா? வார்த்தைக்கு வார்த்தை விசில். பேச்சுக்கு பேச்சு ஆரவாரம் என்று நகர்ந்தது நிகழ்ச்சி.
சுமார் அரை மணி நேரம் பொழி பொழியென பொழிந்தார் டி.ராஜேந்தர். நான் இந்த மேடையில் உட்கார்ந்திருக்கேன் ஓரமா. ஏன்னா நான் பாதியில் எழுந்து போனா மனசு ஆகிடும் பாரமா என்று அடுக்க ஆரம்பித்தவர், மல்லுக்கட்டு, தாலிக்கட்டு, புல்லுக்கட்டு, புள்ளைக்கு து£ளி கட்டு என்று வெளுத்துக் கட்டினார். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆரையே எதிர்த்தவன் என்று அவ்வப்போது கூறவும் மறக்கவில்லை.
அழைப்பிதழில் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர் தாஜ்நு£ர் பற்றி போட்டிருந்தார்கள். அதில் அவர் ரஹ்மானிடம் பணியாற்றியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தார்கள். இது மாதிரி நான் போட்டுக்கணும்னா எதையெதையெல்லாம் போட்டுக் கொள்வது? ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் இரண்டு வருஷம் கீ போர்டு பிளேயரா இருந்தாரு. அதுக்காக அவருகிட்ட இப்ப போய் பூ சென்டோட நிக்கிற ஆளு நான் கிடையாது.
இந்த டி.ஆர் இல்லேன்னா எஸ்.டி.ஆரே கிடையாது. ஆனால் இன்னைக்கு எஸ்.டி.ஆர் ங்கிற பேர்ல கடைசியாதான் டி.ராஜேந்தர் இருக்கான். இது எனக்கு பெருமைதான்.
1980 ல் சென்னைக்கு வந்து மல்லுக்கட்ட ஆரம்பிச்சவன் நான். இன்னைக்கு 2011 லும் சிம்புவோட படத்தோட மல்லுக்கட்டுற தெம்பு எனக்கு இருக்கு. முன்பு நான் ஒருதலைராகம், இரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம்னு வரிசையாக ஹிட் கொடுத்துகிட்டே இருந்தேன். தியேட்டர்ல ஆயிரம் பேர், ரெண்டாயிரம் பேர்னு திரண்டு நிப்பாங்க. இன்னைக்கு 200 பேர் வந்தா அது பெரிய ஹிட் படம்னு ஆகிடுச்சு நிலைமை. காரணம் தியேட்டர் டிக்கெட்டோட விலை. இதை குறைக்கணும்னு அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.
இன்று கார்த்தி, சூர்யா, சிம்பு போன்றவர்களின் படங்கள் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல இருக்கு. சாதாரண ஆளுங்க அங்க போய் டீ குடிக்க முடியுமா? என்னை மாதிரி சின்ன பட்ஜெட்ல எடுக்கிற படங்கள் ஓடணும். நிறைய சின்ன படங்கள் வரணும். அதுக்கேற்ப தியேட்டர் கட்டணங்கள் குறையணும். நடிகர்களும் சம்பளத்தை குறைக்கணும் என்றெல்லாம் முழங்கினார்.
நல்லவேளையாக அவர் வெளியேறிய பின்பு பேச ஆரம்பித்தார் கவிஞர் வாலி. இருந்திருந்தால் ரணகளம்தான். அப்படியென்ன பேசினார் அவர்?
டி.ராஜேந்தர் பேசிட்டு போன பிறகு எந்த அறிவுள்ளவனாவது பேசுவானா? என்று ஆரம்பித்தார் வாலி. ஆனால் பேச்சில் ராஜேந்தரையும் சிம்புவையும் பாராட்ட தவறிவில்லை அவர். சிம்பு ஒரு பாட்டு எழுதி அவரே பாடியிருக்கார். வல்லவன் படத்தில் வரும் அந்த வரி, வாலி போல எனக்கு பாட்டெழுத முடியலையே என்று அமைந்திருக்கும். நான் சிம்புகிட்ட, உங்க அப்பாவே ஒரு பாடலாசிரியர்தான். அவரு கோவிச்சுக்க மாட்டாரா என்றேன். எங்க அப்பாவே இந்த வரிக்காக என்னை பாராட்டினார் என்றார் சிம்பு. அப்படி ஒரு பக்குவம் உள்ளவர் டி.ராஜேந்தர். நான் ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மானிடம் உங்க ரிதம் நல்லாயிருக்கு என்று பாராட்டினேன். நான் டி.ராஜேந்தரிடம்தான் இந்த வித்தையை கற்றுக் கொண்டேன் என்றார் ரஹ்மான். ஆக டி.ராஜேந்தர் இந்த மேடையில் ரஹ்மான் பற்றி சொன்னது உண்மைதான் என்றார் வாலி.
இவர்கள்தான் இப்படி சிரிக்க வைத்தார்கள் என்றால், விழா நடப்பதற்காக இடம் கொடுத்த கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரின் பேச்சில் கரைபுரண்டு ஓடியது காமெடி. படத்தின் இயக்குனர் முருகானந்தம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment