தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? தி.மு.க.வின் அணுகுமுறை எப்படி இருக்கும்?
பதில்:- நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளுவோம்.
கேள்வி:- சட்டப் பேரவையில் தி.மு.க.விற்கு ஒரே பகுதியில் இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லையே?
பதில்:- இடமே ஒதுக்கவில்லையெனில் என்ன செய்ய முடியும்.
கேள்வி:- நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
பதில்:- நிதிநிலை அறிக்கையை படித்த பிறகுதான் கூறமுடியும்.
கேள்வி:- பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திட உங்களிடம் அனுமதி கேட்கப் போவதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தாரே?
பதில்:- அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்குமானால் நாங்களும் போராடுவோம்.
கேள்வி:- திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
பதில்:- அதற்காக நாங்கள் வருத்தப்படவுமில்லை, மகிழ்ச்சியடையவுமில்லை.
கேள்வி:- சமச்சீர்கல்வி வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்று கருதுகிறீர்கள்?
பதில்:- தீர்ப்பு வருவதற்குள் எதுவும் கூறமுடியாது.
கேள்வி:- 6-ந் தேதி திருவாரூர் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்கள். ஆனால் பூண்டி கலைவாணன் ஜாமீனில் வெளிவந்ததும் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
பதில்:- அதற்கும் சேர்த்துதான் கண்டனம். இவ்வாறு கருணாநிதி பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment