சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு கடந்த 22.03.2011 அன்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், எனது சகோதரியின் மகள் ஷபாசவுத்ரி (வயது 20) ஐதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த ஜுன் மாதம் 28 ந் தேதி முதல் அவள் திடீரென மாயமாகி விட்டாள்.
சில நிமிடங்களுக்கு முன்பு அவள் என்னை செல்போனில் தொடர்பு கொண்டாள். அப்போது அவள், தான் சேலம் புதிய பஸ் நிலையத்தில் தவிப்பதாக தெரிவித்தாள். அவள் பேசி முடிப்பதற்குள் செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே, அவளை மீட்டு தாருங்கள்'' என்று பதறியபடி கூறினார்.
இதையடுத்து கலெக்டர் மகரபூஷணம் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியாவுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸ் துணை கமிஷனர் சத்யபிரியா, பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நள்ளிரவில் சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த இளம்பெண்தான் மாயமான ஷபாசவுத்ரி என்பதும், அவருடன் இருந்த வாலிபரின் பெயர் ஆனந்த் என்பதும் தெரியவந்தது.
மீட்கப்பட்ட வாலிபர் ஆனந்த்தின் தந்தை பெயர் சந்திரசேகர். ஐதராபாத்தை சேர்ந்த இவர் மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார். ஷபாசவுத்ரி ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் ஆவார்.
ஆனந்த் எம்.பி.ஏ. பட்டதாரி. ஷபாசவுத்ரி அங்குள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3 ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இதற்கிடையே, ஷபாசவுத்ரியின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் பயந்துபோன அவர் தனது காதலன் ஆனந்த்துடன் கடந்த ஜுன் மாதம் 28 ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதல்ஜோடி இருவரும் பாதுகாப்புக்காக ஊர், ஊராக சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை கண்ணன் ஆனந்த்துக்கு தாத்தா முறை ஆவார். அவர் நமக்கு திருமணம் செய்து வைப்பார் என்று தனது காதலியிடம் கூறிய ஆனந்த், ஷபாசவுத்ரியுடன் ஒரு தனியார் பஸ்சில் கோவைக்கு புறப்பட்டு வந்தார்.
வழியில் அந்த பஸ் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது ஆனந்த் பஸ்சில் தூங்கிக்கொண்டு இருந்தார். ஷபாசவுத்ரி டாய்லெட் செல்வதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அவர் வருவதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது.
இதனால் தவித்துப்போன ஷபாசவுத்ரி பயத்தில் தனது உறவினர்களின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டு, தான் சேலம் புதிய பஸ் நிலையத்தில் தவிப்பதாக தகவல் தெரிவித்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே சார்ஜ் இல்லாததால் செல்போன் ஆப் ஆகிவிட்டது. (அவர் பேசிய உறவினர்களில் ஒருவர்தான் கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார்).
இதற்கிடையே, பஸ்சில் தூங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் கண் விழித்து பார்த்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த தனது காதலியை காணாமல் அவர் திடுக்கிட்டார். அவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய தகவலை அறிந்த ஆனந்த், உடனே பஸ்சை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கினார்.
பின்னர் அந்த வழியாக சேலம் வந்த மற்றொரு பஸ்சில் ஏறி விரைவாக சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு பதறியபடி தனது காதலியை ஒவ்வொரு இடமாக கலக்கத்துடன் தேடிப்பார்த்தார். அப்போது ஒரு இடத்தில் ஷபாசவுத்ரி செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொண்டு
இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்தார். அவர் தனது காதலியின் அருகில் சென்றவுடன் போலீசாரும் அங்கு வந்து விட்டனர்.
இதையடுத்து காதல்ஜோடி இருவரையும் போலீசார் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இருவரும் மீட்கப்பட்டது தொடர்பாக அவர்களின் பெற்றோருக்கும், ஆந்திர போலீசாருக்கும் சேலம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஷபாசவுத்ரியின் தாய் ஆனந்த்தின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், ஆந்திர போலீசார் வந்தவுடன் அவர்களிடம் ஆனந்த்தையும், ஷபாசவுத்ரியும் ஒப்படைக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment