காங்கிரஸ் மரண படுக்கையில் உள்ளது என, பாஜக முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் பேசினார்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கறுப்பு பணம், ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவதை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஊழலுக்கே காங்கிரஸ் கட்சிதான் காரணம், நேரு காலத்திலிருந்து இன்று வரை ஊழல் மலிந்து விட்டது. தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி தி.மு.க ஆட்சியை நீக்கி விட்டு மாற்றாக அ.தி.மு.க ஆட்சியை கொண்டு வந்தது போல் மத்தியிலும் 2014 ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாக வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்கு வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 இடம் கேட்டு பெற்றனர். அதில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். எனவே, காங்கிரஸ் மரண படுக்கையில் உள்ளது. அதை எடுத்து செல்வதற்கு நான்கு பேர்தான் தேவை. ஆனால் ஒரு ஆள் கூடுதலாக வந்து விட்டார்கள். அவர் கொள்ளிசட்டி தூக்கி செல்பவராக இருக்கலாம்.
காங்கிரசுக்கு அடுத்தது பாரதீய ஜனதா தான், வேறு எந்த கட்சியும் வர வாய்ப்பில்லை, மாற்றத்தை ஏற்படுத்த இது நல்ல தருணம், மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு சரியான அணுகுமுறை இல்லை.
ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கொடுத்த கோரிக்கை நியாயமானதாக உள்ளது. இதை எங்கள் கட்சியின் மூலம் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தர வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி சார்பில் நின்ற வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment